Editorial / 2017 ஜூலை 25 , மு.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு வழங்கிய நான்கு உறுதிமொழிகளையும் நிறைவேற்றுவதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும், காணாமல் போனவர்களின் குடும்பங்களின் கடுமையான மனக்காயங்களை ஆற்ற வேண்டிய கடமைப்பாடு, இந்த அரசாங்கத்துக்கு உண்டு என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான
இரா.சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கடிதமொன்றை எழுத்தியுள்ளார்.
அந்தக் கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘காணாமற்போன ஆட்கள்’ என்று தலைப்பில், 2017 ஜூலை, 20ஆம் திகதியிட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தின் பிரதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அந்தக கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “காணாமல் போனவர்களுடைய விடயம் மிகவும் பாரதூரமான ஒரு விடயம் என்பதையும் இப்பிரச்சினைக்கான தீர்வைக் கோரி, வடக்குக் கிழக்கில் காணாமல் போனவர்களின் குடும்ப உறவினர்களால், பல மாதகாலமாகப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதையும் தாங்கள் அறிவீர்கள்.
இந்தக் குடும்பங்களில் அதிகம் பேர், தமது உறவினர்களைப் பாதுகாப்புப் படையினரிடம் கையளித்தவர்கள் அல்லது தமது உறவினர்கள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுக் கொண்டு செல்வதைக் கண்டவர்களாவர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் கணிசமான தொகையினர் இளமையான குடிமக்கள் என்பதோடு, அவர்கள் ஆயுதப் போராட்டத்தில் சம்பந்தப்படாதவர்களாவர்.
காணாமல் போனோருடைய குடும்பங்களில் அதிகமானோரை, நான் சந்தித்திருக்கின்றேன். கிளிநொச்சியில் காணாமல் போனவர்களின் குடும்பங்களை, ஜூலை 12ஆம் திகதியன்று இறுதியாக நான் சந்தித்தேன்.
காணாமல் போனோருடைய சில குடும்பங்களைச் சேர்ந்தவர்களைத் தாங்களும் சந்தித்துள்ளீர்கள்.
இந்தக் குடும்பங்களினால் எனக்குத் தெரிவிக்கப்பட்ட விடயங்களில் இருந்து அறியக்கூடியதாக இருப்பது பின்வரும் விடயங்களைப் பகிரங்கப்படுத்த அரசாங்கம் உறுதியளித்துள்ளது என்பதாகும்.
(1) அரசாங்கக் கடமைப் பொறுப்புக்களை தாங்கள் ஏற்றுக்கொண்ட வேளையில் கைதாகித் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த இடங்கள்.
(2) தற்பொழுது தடுப்பில் இருப்பவர்களின் பெயர்கள், மற்றும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்கள்.
(3) கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிலரைத் தடுத்து வைத்துள்ளதாகக் கூறப்படும் இரகசியத் தடுப்பு முகாம்கள் பற்றிய தகவல்கள் அறிந்துள்ள குடும்ப உறவினர்களுக்கு அத்தகைய முகாம்களுக்குச் சென்று பார்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்தல்.
(4) கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆக்கப்பட்ட காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் தொடர்பான சட்டம் நடைமுறைக்கு வரும்போது, மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு படிமுறைகளுடாகக் காணாமல் போனவர்களுடைய குடும்பங்களின் வேதனையான பிரச்சினையை ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதற்குச் சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்படும். இச்செயற்பாடுகள் ஊடாக உண்மையான தகவல்கள் கிடைக்காமையால் குடும்பங்கள் எதிர்கொள்ளும் நிச்சயமற்ற நிலைமையில் ஏற்படும் மன உளைச்சல்கள் முடிவுக்குக் கொண்டு வரப்படும்.
எனவே, இத்தகைய விடயங்களை உள்ளீர்த்துச் செயற்படுத்தக்கூடிய நிகழ்ச்சித் திட்டமொன்றைத் தயாரிக்குமாறு, தங்களை நான் கேட்டுக் கொள்கிறேன். காணாமல் போனவர்களுடைய விடயங்களை அர்த்தமுள்ள வகையிலும் உரிய நோக்கங்களை அடையும் வகையிலும் கையாள்வதற்கான வழிமுறைகளை நான் மேலே (1), (2), (3) மற்றும் (4) பிரிவுகளில் சுட்டிக்காட்டியுள்ளேன்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
13 minute ago
36 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
36 minute ago
3 hours ago
4 hours ago