A.P.Mathan / 2010 நவம்பர் 04 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலகில் அதிகமான பண்டிகைகள், விரதங்கள், உபவாசங்கள் போன்ற சமய அனுஷ்டானங்களை கொண்டாடுபவர்களாக இந்துக்கள் உள்ளனர். இவர்கள் புதுவருடப்பிறப்பு, பொங்கல் பண்டிகை இவற்றிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட தீபாவளிக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் மிக அதிகம். தீபாவளி வருகின்றது என்று அறிந்து ஒரு மாதத்திற்கு முன்பே அதை கொண்டாடுவதற்கான ஆயத்தத்தில் ஈடுபவர்களாக இந்துக்கள் உள்ளனர்.
தீபாவளியன்று அதிகாலை எழுந்து, குளித்து, புத்தாடை அணிந்து, இனிப்புப் பண்டங்களால் இறந்தவர்களுக்கு படையலிட்டு, வானவேடிக்கைகள் கொழுத்தி சிறப்பாக கொண்டாடி மகிழ்கின்றார்கள். இவ்வாறு இந்துக்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் இத்திருநாளிற்கு இவ்வாறு பொருள் கூறப்படுகின்றது.
தீபம் என்றால் 'ஒளி விளக்கு', வளியென்றால் 'வரிசை'. வரிசையாக தீபம் ஏற்றி இருள் நீங்கி ஒளி பெறுவதுதான் 'தீபாவளி' என்ற பதத்தின் பொருளாக அமைகின்றது. பொதுவாக மனித மனமானது கோபம், பொறாமை, சுயநலம், தந்திரம் போன்ற தீய குணங்களால் சூழப்பட்டு இருள்படிந்து கிடக்கின்றது. இந்நன்நாளிலேனும் அவற்றை மனதிலிருந்து அழித்து ஒளியைப்போன்று நல்ல எண்ணங்களை மனதில் கொண்டு மகிழ்வுடன் வாழவேண்டும் என்பதற்காகவே தீபங்கள் ஏற்றப்படுகின்றன.
தீபாவளியை நரகசதுர்த்தி என்று அழைப்பவர்களும் உள்ளனர்.
சதுர்த்தியென்றால் 'முக்தி' என்று பொருள். நரக சதுர்த்தியென்றால் நரகாசுரன் முக்திபெற்ற நாள் என்று கூறப்படுகின்றது. இவை தீபாவளி என்ற பதத்தின் பொருள் விளக்கமாக இருக்கின்றன. தீபாவளியென்ற ஒருதினம் எவ்வாறு தோன்றியது என்பதற்கு பல ஐதீகங்கள் கூறப்பட்டுவருகின்றன.
முற்காலத்தில் நரகாசுரன் எனும் அசுரன் மக்களுக்கு பல கொடுமைகளை செய்து வந்துள்ளான். அவனை கிருஷ்ணபரமாத்மா அழிப்பதற்கு முற்பட்டார். முதலில் அவர் நரகாசுரனின் மந்திரியான முரனையும் மற்றும் அவனது பிள்ளைகளையும் அழித்தார். பின்னர் நரகாசுரனை அழிப்பதற்கு தனது சக்ராயுதத்தை அவனை நோக்கி ஏவினார். அதன்போது கிருஷ்ணபரமாத்மா முன், பூமாதேவி தோன்றி 'நரகாசுரன் வராக அவதாரத்தின் போது நம் இருவருக்கும் பிறந்தவன்' என்றும் அவரை மன்னித்து விட்டு விடும்படியும் கூறி மறைந்தார்.
பின் கிருஷ்ணபரமாத்மா நரகாசுரனை மன்னித்து விட்டுவிட தீர்மானித்தார். அதனை அறிந்துகொண்ட நரகாசுரன், கிருஷ்ணபரமாத்மாவின் கால்களில் வீழுந்து தன்னை மன்னித்து விடும்படி கூறியதுடன், தான் செய்த பிழைகளுக்காக வருந்தி மனந்திருந்திய இந்நாளை இந்துக்கள் அனைவரும்; தீபாவளி திருநாளாக தீபம் ஏற்றிக் கொண்டாடி மகிழவேண்டும் என்ற வரத்தை பெற்றுக்கொண்டார்.
தீபாவளியை அனுஷ்டிப்பதற்கு பொதுவாக கூறப்படும் வரலாற்று காரணம் இதுவாகும். இதைத் தவிர இன்னும் பல வரலாற்று ஐதீகங்கள் திபாவளித் திருநாளை அனுஷ்டிப்பதற்குரிய காரணங்களாக கூறப்படுகின்றன.
இராமாயண இதிகாசத்தின் பாட்டுடைத் தலைவனான இராமர் 14 ஆண்டுகள் வனவாச வாழ்க்கையை முடித்துவிட்டு, பாட்டுடைத் தலைவி சீதையுடனும் இலக்ஷ்மனுடனும்; தனது தாய்திருநாடான அயோத்திக்கு மீள வரும்போது, அயோத்தி நகர மக்கள் அவர்களை விளக்கேற்றி வரவேற்றுள்ளனர். அவ்வாறு வரவேற்ற அந்நாளை இந்துக்கள் தீபாவளியாக கொண்டாடி மகிழ்கின்றனர் என்று மற்றுமொரு ஐதீகம் கூறுகின்றது.
இதைத்தவிர ஸ்கந்தபுராணத்தின்படி பார்வதிதேவி உலகின் நாயகனான சிவனில் பாதியாக தானும் உரு மாறவேண்டும் என்ற எண்ணத்தில் உலகில் யாருமே அதுவரை அனுஷ்டிக்காமல் இருந்த கேதாரகௌரி விரதத்தை சிவனை நோக்கி புரட்டாதி மாத சுக்கிலபட்ச தசமி தொடக்கம் ஐப்பசி மாதத்துக் கிருஷ்ணபட் தசமியான தீபாவளி திருநாள் வரை (21 நாட்கள்) முறைப்படி அனுஷ்டித்ததனால் அம்பாளின் விரத்தில் சிவன் மகிழ்ந்து அம்பாளின் முன் காட்சியளித்து அவரது இடது பாகத்தை அம்பாளுக்கு வழங்கி அர்த்தநாதீஸ்வர் மூர்த்தம் பெற்று கைலாயத்தை அடைந்தனர். அவ்வாறு அர்த்தநாதீஸ்வரர் மூர்த்தம் பெற்றது இத் திருநாளில் என்பதால் இந்துக்கள் இத்தினத்தை தீபம் ஏற்றி தீபாவளித்திருநாளாக வணங்குகின்றனர்.
இவை தீபாவளி திருநாளை அனுஷ்டிப்பதற்குரிய பிரதான காரணங்களாக கூறப்படுகின்றன.
சீக்கியர்களின் வரலாறுப்படி குரு கோவிந்த சிங் சிறையிலிருந்து விடுப்பட்ட தினமாக இதனை கருதுகின்றனர்.
சமனர்கள் மகாவீரர் அமரத்துவம் பெற்ற தினமாக இதனைக் கருதுகின்றார்கள்.
இவை தீபாவளியை இந்துக்கள் அனுஷ்டிப்பதற்குரிய பிரதான காரணங்களாக கூறப்பட்டாலும் இவையனைத்தும் இத் திருநாளில் தீமைகளை அழித்து நன்மைகளை மட்டும் பெற்றுக்கொள்வோம் என்ற ஒன்றையே இறுதியில் எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளன.
இருளை அகற்றும் ஒரே சக்தியாக ஒளி அமைந்துள்ளது. இங்கு தீமைகள் என்பது இருளாகவும் அதை அழித்து வெளிச்சத்தைத் தருவது ஒளியாகவும் அமைந்துள்ளது.
இன்னும் கூட சமூகத்தில் பல தீமைகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. எப்போதும் தீமைகள் வெல்லப்படுவதில்லை. ஒவ்வொரு யுகத்திலும் தீமையின் வடிவங்களை அழிக்க கடவுள், மனித அவதாரம் எடுத்துள்ளார். தர்மமே எப்போதும் ஜெயிக்கும் என்பதை தீபவளியுடன் தொடர்புப்பட்டு வரும் அனைத்துக் கதைகளும் உணர்த்துகின்றன.
ஆகையினால் தீமைகளை ஒழித்து வளமாக வாழ இத்தீபத் திருநாளில் திடசங்கட்பம் பூணுவோமாகா.
-ஜி.கோகிலவாணி
24 minute ago
35 minute ago
52 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
35 minute ago
52 minute ago
58 minute ago