2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

அம்பாறையில் நெல்லை தரமான விலைக்கு விற்பதில் விவசாயிகள் சிரமம்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 15 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா, பைஷல் இஸ்மாயில்

அம்பாறை மாவட்டத்தில் நெல் களஞ்சியசாலைகள் போதாமையால் தங்களின் நெல்லை தரமான விலைக்கு விற்பனை செய்வதில் விவசாயிகள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கி வருவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை அமர்வு, திருகோணமலை மாவட்டத்திலுள்ள மாகாணசபை அலுவலகத்தில்;  தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியது. இதன்போது, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மஞ்சுள  பெர்னாண்டோ அவசரப் பிரேரணையொன்றை முன்வைத்து உரையாற்றியபோதே, மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'இந்த மாவட்டத்திலுள்ள விவசாயிகளின் நெல்லைக் கொள்வனவு செய்யும் வகையில் போதியளவான  களஞ்சியசாலைகள் அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில் ஏற்கெனவே கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்ட நெல்லை அங்கிருந்து அகற்றி இவர்களின் நெல்லைக் கொள்வனவு செய்ய வேண்டும்' என்றார்.

'விவசாயிகளை அலைக்கழிப்பது  எந்த வகையில் நியாயம்? இதற்கான சிறந்த தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்' எனவும் அவர் மேலும் கூறினார்.

இந்தப் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றிய கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், 'வெய்யிலிலும் மழையிலும் மிகவும் கஷ்டப்பட்டு உற்பத்தி செய்யப்படுகின்ற நெல்லைத் தரமான விலைக்கு விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் திண்டாடுவதை அவதானிக்க முடிகிறது' என்றார்.  

'மேலும், அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து செல்கின்றது. இதுவா நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள்?

நல்லாட்சி அரசாங்கம் என்று கூறப்படும் இந்தச் சந்தர்ப்பத்தில் நல்லாட்சியை விரும்பிய மக்களால்  இவ்வாறான அநீதியை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்' எனவும் அவர் மேலும் கூறினார்.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--