2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

கரையாவெள்ளி பகுதியில் பதற்றம்: இம்ரான் எம்.பி தலையீடு

Niroshini   / 2017 மே 20 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

புல்மோட்டை -  பட்டிகுடா -  கரையாவெள்ளி மீள் குடியேற்றப்பகுதியில், நேற்று வனப்பரிபாளன அதிகாரிகள் குச்சவெளி பிரதேச செயலாளர் உள்ளிட்ட குழுவினர் வருகை தந்தமையால் அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

நேற்று இப்பகுதிக்கு விஜயம் செய்த குறித்த குழுவினர் அங்கு மீள்குடியமர்ந்துள்ள மக்களை அச்சுறுத்தியதாகவும் அவர்களின் காணிகளில் கட்டுமாணப்பணிகளை மேற்கொள்ளக்கூடாது, இது வன பரிபாலன சபைக்கு சொந்தமானது என தெரிவித்தமையால் அப்பகுதி மக்கள் இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

உடனடியாக அங்கு விரைந்த நாடாளுமன்ற உறுப்பினர் இது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபருடன் உரையாடி வன பரிபாலன சபை அதிகாரிகளை அங்கிருந்து செல்ல உத்தரவிட்டார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,

“இது நீண்ட காலமாக மீள் குடியமர்ந்த பொதுமக்கள் வாழும் பிரதேசமாகும். இந்தக் காணிகளுக்கான பேர்மிட்களும் அவர்களிடம் உள்ளன. இது அரசாங்கத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்த சில அரச அதிகாரிகள் செய்யும் திட்டமிட்ட செயற்பாடாகும். இது தொடர்பாக அரசாங்க அதிபருக்கு தெளிவூட்டி இனி இப்பகுதியில் உள்ள  பொது  மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வண்ணம் எந்தவித செயற்பாடுகளையும் மேற்கொள்ள கூடாது என  வன பரிபாலன சபை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் இவ்விதமான திட்டமிடப்பட்ட செயற்பாடுகள் சம்மந்தமாக ஜனாதிபதியின் கவனத்துக்கும் கொண்டுவரவுள்ளேன்” என தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .