2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

காணாமல்போன மீனவரை கண்டுபிடிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Administrator   / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக், ஏ.எஸ்.எம்.யாசீம், ஏ.எம்.ஏ.பரீத், வடமலை ராஜ்குமார், எஸ்.சசிக்குமார்

திருகோணமலை, சல்லி கடலில் மீன்பிடிப்பதற்கு ஞாயிற்றுக்கிழமை(24) சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதை தொடர்ந்து அம்மீனவரை கண்டுபிடித்து தருமாறு கோரி புல்மோட்டை - திருகோணமலை வீதியை மறித்து சல்லிக் கிராம மக்கள் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சல்லிக் கிராமத்தை சேர்ந்த அழகுராசா தங்கரூபன் (வயது 28) என்ற மீனவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள மீனவர் சங்கங்கள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின்போது,  மர்மமான முறையில் காணாமல் போன இந்த மீனவர் பற்றிய விசாரணைகளை துரிதப்படுத்தமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

மேலும், இந்த மீனவர் காணாமல் போவதற்கு  காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகை தந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடினர்.

காணாமல் போனவர் தொடர்பில் தாம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

இவ்வாறிருக்க, காணாமல் போன இந்த மீனவரின் படகு திருக்கோணேஸ்வரக் கடலிருந்து மீட்கப்பட்டு,  துறைமுகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அப்படகிலிருந்து அவர் அணிந்திருந்த ஆடை, உடைக்கப்பட்ட கையடக்கத்தொலைபேசி உள்ளிட்டவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தும் மீனவர்களுக்கும் சிறு படகு மீனவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, இந்த மீனவர் காணாமல் போயுள்ளார்.

இவரை தேடும் நடவடிக்கையில் மீனவர்களும் கடற்படையினரும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .