2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

புத்தர் சிலை விவகாரம்: சாம்பல் தீவுக்குப் பொலிஸ் பாதுகாப்பு

Thipaan   / 2016 ஜூலை 12 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக், பதூர்தீன் சியானா, வடமலை ராஜ்குமார்

திருகோணமலை, சாம்பல்தீவுச் சந்தியில் மீண்டும் புத்தர் சிலை நிறுவப்பட்டதையடுத்து ஏற்பட்ட பதற்றத்தினால், அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நிலாவெளி வீதியிலுள்ள தனியார் காணியில் பத்தாண்டுகளுக்கு மேலாக காணப்பட்ட இரண்டு சோதனைச் சாவடிகளை இராணுவத்தினர் அண்மையில் அகற்றியிருந்தனர். அதன்போது, அவ்விடத்திலிருந்த புத்தர் சிலைகளையும் அவர்கள் எடுத்துச் சென்றிருந்தனர்.

இந்நிலையில், சாம்பல்தீவுச் சந்தியில், புத்தர் சிலை அகற்றப்பட்டு வெறுமையாக இருந்த இடத்தில், பிள்ளையார் சிலை ஒன்றும், சூலம் ஒன்றும் கடந்த 8ஆம் திகதியன்று வைக்கப்பட்டதாகவும் அந்தச் சிலை, அன்றையதினமே, இனந்தெரியாத நபர்களால் உடைத்து சேதமாக்கப்பட்டதுடன், மறுநாள் மீண்டும் வைக்கப்பட்ட பிள்ளையார் சிலையும் உடைத்தெறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (10) புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்த பகுதியில் படையினரால் நாட்டப்பட்டு வளர்ந்திருந்த அரசமரம் ஒன்று இனந்தெரியாதவர்களால் வெட்டி வீழ்த்தப்பட்டது.

இதையடுத்து திங்கட்கிழமை (11)காலை, பௌத்த கொடிகளால் சாம்பல்தீவு சந்தி அலங்கரிக்கப்பட்டதுடன், அங்கு ஒன்று கூடிய பெருமளவான பெரும்பான்மையினத்தவரும் பௌத்த பிக்குகளும்  வழிபாடு நடத்தியதுடன், அவசர அவசரமாக புத்தர் சிலையும் நிறுவப்பட்டுள்ளது.

இதுதொடர்பில், உப்புவெளி பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

இவ்விடயம் தொடர்பில், தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கவில்லையெனவும், புத்தர் சிலை நிறுவப்பட்டதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

எனினும், முன்னாயத்த நடவடிக்கையாக அப்பகுதியில் பொலிஸார் சிலரை பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .