2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

திருமலை மாவட்டம் கல்வியில் பின்தங்கியுள்ளது: கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 25 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஒலுமுதீன் கியாஸ்


கிழக்கு மாகாணத்தில் ஏனைய இரண்டு மாவட்டங்களை விடவும் திருகோணமலை மாவட்டம் தொடர்ந்து கல்வியில் பின்நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. இதற்கு அதிபர்கள் யுத்தத்தைக் காரணம் காட்டி தப்பித்துக் கொள்ள முயல்வதை இனிமேல் நிறுத்திக் கொள்ள வேண்டும். யுத்தம் எம்மை விட்டுப் போனாலும் யுத்தத்தை நாம் இழுத்துக்கொண்டிருப்பது நாம் சமூகத்துக்குச் செய்து கொண்டிருக்கின்ற துரோகம் என கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிசாம் தெரிவித்தார்.

2010ஆம் 2011ஆம் ஆண்டு  நடைபெற்ற க.பொ.த. உயர்தர மற்றும் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் கிழக்கு மாகாண பாடசாலைகள் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்காக நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார்.

இன்று வியாழக்கிழமை திருகோணமலை சென். ஜோசப் கல்லூரியில் நடைபெற்ற திருகோணமலை மாவட்ட அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 

'திருகோணமலை மாவட்டத்தில் நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக இந்த வருட இறுதிக்குள் மாவட்ட சேவைத் திட்டத்தின் கீழ் 452 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட சேவைத்திட்டத்தின் கீழ் இந்த நியமனம் வழங்கப்படவுள்ளதால், 452 பேருக்கான விண்ணப்பம் இந்த மாவட்டத்தில் இருந்து கிடைக்கவில்லை என்பதை உங்கள் முன் கூறுவதில் வெட்கமடைகிறேன். உங்கள் ஊருக்கு, உங்கள் கிராமத்துக்கு குறைந்தபட்சம் ஆசிரியர் தொழிலுக்கு தகுதியுடையவர்களையாவது நாம் உருவாக்கத் தவறி விட்டோமே.

இந்த நிலையில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் அவற்றை நிரப்ப வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. இந்த விடயம் நாம் கல்வியில் பின்தங்கியிருக்கிறோம் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

வெளிமாவட்ட ஆசிரியர்கள் ஓரிரு மாதங்களில் அவர்களின் சொந்த ஊருக்கு ஓடிவிடுகிறார்கள் என்று அதிபர்கள் அடிக்கடி என்னிடம் முறைப்பாபாடு செய்கின்றனர். இது உண்மையே இருப்பினும் இதற்கு நான் பொறுப்பல்ல.

பாடசாலை தேவைகள் குறித்து அரசியல்வாதிகளிடம் முன்வையுங்கள். அப்போது அவர்கள் ஆசிரியர் இடமாற்றத்தில் தலையிடமாட்டார்கள். இந்த விடயங்கள் அரசியல்வாதிகளுக்கு தெரியாமல் உள்ளன. எனவே அரசியல்வாதிகளை குறைகூற முடியாதுள்ளது. பாடசாலைகளில் ஆலோசனை வழிகாட்டல் பிரிவு என்பது ஒர் சாதாரண விடயம் என ஆசிரியர்கள் அதிபர்கள் நினைத்துக் கொண்டிருப்பது மிக மோசமான விடயமாகும். சூழல், குடும்பம்;, சமூகம் என்று பல்வேறு காரணிகளால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவனை சாதாரண வாழ்க்கை முறைக்கு கொண்டு வருவதென்பது சுலபமான விடயமல்ல. ஒரு மாணவனை அவனது பிரச்சினையில் இருந்து விடுவிக்க ஆறு மாதங்களும் எடுக்கலாம் ஆறு வருடங்களும் எடுக்கலாம். இதற்காகவே பாடசாலைகளில் ஆலோசனை வழிகாட்டலுக்காக பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். ஆனால் தாம் எதற்கு நியமிக்கப்படுகிறோம் என்று தெரியாமல் அந்த ஆசிரியர்கள் வருடம் பூராவும் சும்மா இருந்துவிட்டு தான் ஓய்வூதியம் பெறும் வழியாக அந்த நியமனத்தைக் கருதுகிறார்கள்.

இந்த மாவட்டத்தில் தாய் மொழியிலும் அதிகமான மாணவர்கள் சித்தியடையாமல் இருப்பது சிந்திக்கப்பட வேண்டியதொன்றாகும். இதற்கான காரணம் பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் இல்லாமை என்று அதிபர்கள் சாட்டுச் சொல்ல முடியாது. அன்று 2ஆம் 3ஆம் தரம் படித்தவர்களே இன்று கவிஞர்களாக உள்ளனர். எழுத்துப்பிழையின்றி எழுதுகிறார்கள். அன்று உபகரணங்கள் இல்லாமலே ஏராளமான விஞ்ஞானிகள் தோன்றினார்கள். இன்று நவீன கருவிகளும் வகை வகையான கற்பித்தல் சாதனங்களும் ஏராளம் அப்படியானால் ஒவ்வொரு நாளும் வி;ஞ்ஞானிகள் தோற்றம் பெற வேண்டுமே? ஆசிரியர்கள் தாம் விஞ்ஞானிகளை உருவாக்க ண்;வண்டிய காலத்தில் நாம் தாய்மொழியில் மாணவர்கள் சித்தியடையவிவில்லையே என்று பேசிக்கொண்டிருக்கிறோம்.

இந்த காலத்தில் ஆசிரிய ஆலோசகர்கள் உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் என்று எவரும் இருந்ததில்லை. இந்த நிலையிலும் இன்று 11 ஆண்டுகள் ஒரு பிள்ளை கற்ற பின் பரீட்சையில் சித்தியடையவில்லை என்றால் எதற்காக இந்த கல்விக் குழாம்?

ஆயிரம் வருடங்களுக்கு முன்பு பிறந்த குழந்தையைக்காட்டிலும்  நூறு வருடங்களுக்கு முன்பு பிறந்த குழந்தையைக் காட்டிலும் இன்று பிறக்கின்ற குழந்தைக்கு அறிவு வித்தியாசம். இறைவன் நவீன தொழில்நுட்ப உலகிற்கு ஏற்ப குழந்தைகளைத் தருகிறான். காலத்துக்கு ஒவ்வாத குழந்தைகளைத் தரவில்லை. இதன் காரணமாகத்தான் அந்தப் பிள்ளை பத்து வயதில் எவரது உதவியும் இல்லாமல் ஆசிரியர்களுக்கும் தெரியாத தொழில்நுட்பங்களை அறிந்து விடுகின்றது. இந்த சூழ்நிலையில் ஆசிரியர்கள் எவ்வாறு அந்தக் குழந்தைகளுக்கு கற்பித்துக் கொடுக்க முடியும். எனவே நவீன உலகின் மாற்றத்துக்கு ஏற்ப ஆசிரியர்களும் மாற வேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--