Shanmugan Murugavel / 2016 மார்ச் 27 , மு.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து அணிக்கெதிரான முக்கியமான உலக இருபதுக்கு-20 போட்டியில் தோல்வியடைந்த இலங்கை, அத்தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், தோல்விக்கான காரணமாக, அனுபவமின்மையைத் தெரிவிக்க முடியாது என, இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்தார்.
டெல்லியில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடியிருந்த இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களைப் பெற, பதிலளித்தாடிய இலங்கை அணி, 4 விக்கெட்டுகளை இழந்து 15 ஓட்டங்களுடன் தடுமாறியிருந்தது. ஆனால், அஞ்சலோ மத்தியூஸ், சாமர கப்புகெதர, திஸர பெரேரா ஆகியோர் சிறப்பாக விளையாட, இலங்கைக்கான வெற்றி வாய்ப்பு ஏற்பட்டது. இறுதியில், 10 ஓட்டங்களால் இலங்கை தோல்வியடைந்திருந்தது. இலங்கை அணிக்காக இறுதிவரை போராடியிருந்த அஞ்சலோ மத்தியூஸ், 54 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இந்நிலையில், தோல்வி தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அஞ்சலோ மத்தியூஸ், 'கடந்த சில மாதங்களாக, ஏமாற்றந்தருவனவாக அமைந்தன. இரசிகர்களையும் முழு நாட்டையும் ஏமாற்றிவிட்டோம்" என அவர் தெரிவித்தார்.
'சிறந்த கிரிக்கெட்டை நாங்கள் விளையாடியிருக்கவில்லை, நாம் அனைவரும் ஏமாற்றமடைந்துள்ளோம். நாம் செய்யக்கூடியது என்னவெனில், சுமார் 20 வீரர்களைத் தெரிவுசெய்து, அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதாகும். அவர்கள் எவ்வாறு பெறுபேறுகளை வெளிப்படுத்துகிறார்கள் எனப் பார்த்த்து, அதன் பின்னர் முடிவுகளை எடுப்பதாகும். அதிரடி முடிவுகள், பிரச்சினைகளைத் தீர்க்காது. நாங்கள் முயல வேண்டும், அத்தோடு பொறுமையாக இருக்க வேண்டும்" என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கை அணியின் பந்துவீச்சுத் தடுமாறியிருந்த நிலையில், இப்போட்டிகளில் லசித் மலிங்க விளையாடாமை உணரப்பட்டிருந்தது. 'லசித் மலிங்கவை இழந்தமை, முழு அணிக்குமே பாரிய இடியாக அமைந்தது. அவர் எவ்வாறானவ் என்பதும் எங்களுக்கு அதிக போட்டிகளை வெற்றிகொண்டமையும் நாம் அறிவோம். இறுதிநேரத்தில் அவர் வெளியேறியமை, பாரிய அடியாகும்" என்றார்.
இந்த உலக இருபதுக்கு-20 தொடரில், இலங்கையின் அனுபவமற்ற அணியே பங்குபற்றிய போதிலும், அதனைக் காரணமாகக் குறிப்பிட முடியாது என்று தெரிவித்த அவர், இது உலகக் கிண்ணம் எனவும் இந்த பெரிய அரங்கில், அனைவரும் சிறப்பாகச் செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
4 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Oct 2025