2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

ஆசியக் கிண்ணம் நாளை ஆரம்பிக்கின்றது

Editorial   / 2018 செப்டெம்பர் 14 , மு.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஹொங் கொங் அணிகள் பங்கேற்கும் 14ஆவது ஆசியக் கிண்ணத் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் இலங்கை, பங்களாதேஷ் அணிகள் இலங்கை நேரப்படி நாளை மாலை ஐந்து மணிக்கு மோதவுள்ள குழு பி போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

இதுவரை நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடர்களில் ஆறு தடவைகள் சம்பியனாகி இந்தியாவே அதிக தடவைகள் சம்பியனான அணியாகக் காணப்படுகின்றது. இது தவிர, இறுதியாக 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற தொடரிலும் இந்தியாவே சம்பியனாகியிருந்தது.

அந்தவகையில், தமது முதன்மை துடுப்பாட்ட வீரரான விராத் கோலிக்கு ஓய்வு வழங்கிவிட்டு இத்தொடரில் களமிறங்கும் இந்தியாவுக்கே கிண்ணத்தை தக்க வைக்கும் அதிகளவான வாய்ப்புகள் காணப்படுகின்றபோதும் இம்முறை ஆசியக் கிண்ணப் போட்டிகளானவை ஒருநாள் சர்வதேசப் போட்டிகளாகக் காணப்படுகின்ற நிலையில், பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகளும் இந்தியாவுக்கு சவாலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

1984ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆசியக் கிண்ணமானது, இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறுகையில், 2015ஆம் ஆண்டு முதல் நடைபெறும் ஆசியக் கிண்ணங்களானதை அதைத் தொடர்ந்து வருகின்ற உலகத் தொடர்களைப் பொறுத்து, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளாகவும் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளாகவும் மாறி மாறி இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில், 2016ஆம் ஆண்டு உலக இருபதுக்கு – 20 நடைபெற்றமையால், இறுதியாக நடைபெற்ற அவ்வாண்டு ஆசியக் கிண்ணம் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளாக இடம்பெற்ற நிலையில், அடுத்தாண்டு உலகக் கிண்ணம் இடம்பெறவுள்ள நிலையில், இவ்வாண்டுப் போட்டிகள் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளாக இடம்பெறுகின்றன.

இவ்வாண்டு ஆசியக் கிண்ணத்தில், ஆசிய கிரிக்கெட் சபையின் முழு அங்கத்துவ நாடுகளான இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் நேரடியாகத் தொடருக்குத் தகுதிபெற்றிருந்தன.

ஹொங் கொங், ஐக்கிய அரபு அமீரகம், ஓமான், நேபாளம், மலேஷியா, சிங்கப்பூர் ஆகியவற்றுடன் தகுதிகாண் தொடரில் விளையாடி அதில் சம்பியனானனதன் மூலமே ஆசியக் கிண்ணத்துக்கு தகுதிபெற்றிருந்தது.

இவ்வாண்டு உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் 10ஆம் இடத்தையே பெற்று ஒருநாள் சர்வதேசப் போட்டி அந்தஸ்தை ஹொங் கொங் இழந்தபோதும் பல அணிகள் பங்கேற்கும் ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர்களின் அனைத்துப் போட்டிகளுக்கும் ஒருநாள் சர்வதேசப் போட்டி அந்தஸ்து வழங்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் சபை கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தபடி, இவ்வாண்டு ஆசியக் கிண்ணத்தில் ஹொங் கொங் விளையாடும் போட்டிகளும் ஒருநாள் சர்வதேசப் போட்டி அந்தஸ்தை பெறுகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--