Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2016 மே 26 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இலங்கை அணி இம்முறை இங்கிலாந்துக்குச் சென்ற போது, இந்தத் தொடர் இலகுவானதாக இருக்குமென எவருமே எதிர்பார்த்திருக்கவில்லை. இதற்கு முன்னர் இங்கிலாந்தில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரை இலங்கை கைப்பற்றியிருந்த போதிலும், குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன இன்றிக் களமிறங்கும் அணி, மோசமான தோல்வியைத் தவிர்ப்பதே பெரியதாக அமைந்தது.
இலங்கையின் பிரபல நேர்முக வர்ணனையாளரான றொஷான் அபேநாயக்க, விஸ்டன் ஸ்ரீ லங்கா தளத்துக்கு வழங்கிய நேர்காணலில், இத்தொடரில் ஒரு போட்டியில் மாத்திரம் தோல்வியடைந்து, 0-1 என்ற கணக்கில் தொடரை முடித்துக் கொண்டாலே, இலங்கை வெற்றிபெற்றது போன்றதாகும் எனத் தெரிவிக்குமளவுக்கே எதிர்பார்ப்புகள் இருந்தன.
ஆனால், முதலாவது போட்டியில் முதலில் பந்துவீசிய இலங்கை அணி, 83 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியபோது, நம்பிக்கை பிறந்திருந்தது. இறுதியில் இங்கிலாந்து அணி 298 ஓட்டங்களைப் பெற்ற போதிலும் கூட, நம்பிக்கை காணப்பட்டது. ஆனால், மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி, ஓர் இனிங்ஸ் மற்றும் 88 ஓட்டங்களால் அவ்வணி தோல்வியடைந்தது.
இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது போட்டி, செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் மைதானத்தில் இலங்கை நேரப்படி மாலை 3.30க்கு நாளை ஆரம்பிக்கவுள்ளது. தொடரின் முதற்பந்து வீசப்படுவதற்கு முன்பே, இலங்கையின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரை இழந்திருந்த இலங்கை அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக, முக்கிய வேகப்பந்து வீச்சாளராக மாறியிருக்கின்ற துஷ்மந்த சமீரவை இழந்திருக்கிறது. இந்நிலையில், எதிர்பார்ப்புகள் முற்றிலும் இல்லாத நிலையிலேயே களமிறங்குகிறது.
முதலாவது போட்டியில் ஓரளவு சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி குசால் மென்டிஸ், அணியின் முக்கிய வீரராகத் திடீரென மாறியுள்ளார். மறுபுறத்தில், சிரேஷ்ட வீரர்களான அஞ்சலோ மத்தியூஸ், டினேஷ் சந்திமால், லஹிரு திரிமான்ன, திமுத் கருணாரத்ன, கௌஷால் சில்வா ஆகியோர், தங்களது பங்கை ஆற்ற வேண்டிய தேவையிருக்கிறது.
பந்துவீச்சில், தம்மிக்க பிரசாத், துஷ்மந்த சமீர ஆகியோரின் இழப்பினால், நாளை ஆரம்பிக்கவுள்ள போட்டியில் ஷமின்ட எரங்க, நுவான் பிரதீப், சுரங்க லக்மால் ஆகியோர் களமிறங்குவர் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதேபோல், முதலாவது போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய தசுன் ஷானகவும், இப்போட்டியில் முக்கியம் பெறுகிறார்.
இங்கிலாந்தைப் பொறுத்தவரை, சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸின் காயம், அவ்வணிக்குப் பாதிப்பாக அமையும். அவருக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர்களான கிறிஸ் வோக்ஸ் அல்லது ஜேக் போல் களமிறங்கவுள்ளனர்.
சகலதுறை வீரருக்குப் பதிலாக பந்துவீச்சாளரொருவர் களமிறங்குவதென்பது, இலங்கைக்கு அனுகூலமானதாகும். ஆனால், முதலாவது போட்டியைப் போன்று மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினால், அந்த அனுகூலத்தைச் சரிவரப் பயன்படுத்த முடியாத நிலை காணப்படும்.
முதலாவது போட்டியைப் போலன்றி, இந்தப் போட்டியிலாவது ஓரளவு போட்டித்தன்மையை வெளிப்படுத்துமா இலங்கை?
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
20 minute ago
53 minute ago
1 hours ago