2021 மே 06, வியாழக்கிழமை

இந்தியாவுக்கு இனிங்ஸ் வெற்றி

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 25 , மு.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் பிரதான சுழற்பந்துவீச்சாளரான இரவிச்சந்திரன் அஷ்வினின் சகலதுறைப் பெறுபேறுகள் கைகொடுக்க, அன்டிகுவாவில் இடம்பெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், ஓர் இனிங்ஸ் மற்றும் 92 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகளில் தனது முதலாவது, இனிங்ஸ் வெற்றியாகவும், ஆசிய நாடுகளுக்கு வெளியே பெறப்பட்ட மிகப்பெரிய வெற்றியாகவும் குறிப்பிட்ட வெற்றியை பதிவு செய்து கொண்டது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி, முதலில் துடுப்பெடுத்தாடி, அணித்தலைவர் விராத் கோலியின் 200, இரவிச்சந்திரன் அஷ்வினின் 113, ஷீகர் தவானின் 84 ஓட்டங்கள் உதவியோடு, எட்டு விக்கெட்டுகளை இழந்து 566 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது தனது ஆட்டத்தை இடைநிறுத்தியது. பந்துவீச்சில், தேவேந்திர பிஷூ, கிரேய்க் பிராத்வெயிட் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் ஷனோன் கப்ரியல் இரண்டு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 243 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில், கிரேய்க் பிராத் வெயிட் 74, ஷேன் டௌரிச் ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மொஹம்மட் ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தொடர்ந்து, ஃபொலோ ஒன் முறையில் தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 231 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுத் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், கார்லோஸ் பிராத் வெயிட் ஆட்டமிழக்காமல் 51, மார்லன் சாமுவேல்ஸ் 50 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், இரவிச்சந்திரன் அஷ்வின் ஏழு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

போட்டியின் நாயகனாக இரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .