2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை - ஆண்கள் தோல்வி: பெண்கள் வெற்றி

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 28 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக இருபதுக்கு-20 தொடரின் ஆண்கள், பெண்கள் தொடர்களின் அரையிறுதிப் போட்டிகளுக்குத் தெரிவாகும் வாய்ப்பை, இலங்கையின் ஆண், பெண் அணிகள் ஏற்கெனவே இழந்திருந்த நிலையில், இத்தொடரில் இவ்விரு அணிகளுக்குமான இறுதிப் போட்டிகள், இன்று இடம்பெற்றன. இலங்கை அணியும் தென்னாபிரிக்க அணியுமே, இரண்டு போட்டிகளிலும் மோதியிருந்தன. இதில், ஆண்கள் அணி தோல்வியடைய, பெண்கள் அணி வெற்றிபெற்றிருந்தது.

ஆண்களுக்கான போட்டி, டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இலங்கை அணி, 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 120 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. முதலாவது விக்கெட்டுக்காக 4.5 ஓவர்களில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்த இலங்கை, அதன் பின்னர் தடுமாறியிருந்தது.

துடுப்பாட்டத்தில் திலகரட்ண டில்ஷான் 36 (40), டினேஷ் சந்திமால் 21 (20), தசுன் ஷானக ஆட்டமிழக்காமல் 20 (18) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கைல் அபொட், ஆரொன் பங்கிசோ, பர்ஹான் பெஹர்டியன் மூவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

121 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 17.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் ஹஷிம் அம்லா ஆட்டமிழக்காமல் 56 (52), பப் டு பிளெஸிஸ் 31 (36), ஏபி டி வில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் 20 (12) ஓட்டங்களைப் பெற்றனர்.

இப்போட்டியின் நாயகனாக, ஆரொன் பங்கிசோ தெரிவானார்.

இந்தப் போட்டியின் முடிவுடன், 4 போட்டிகளில் ஒரேயொரு போட்டியில் மாத்திரம் வெற்றிபெற்ற இலங்கை அணி, சுப்பர் 10 சுற்றில் குழு 'ஏ"இல், 4ஆவது இடத்தையே பெற்றுக் கொண்டது.

பெண்களுக்கான போட்டி, பெங்களூர் எம். சின்னசுவாமி மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 114 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் அணித்தலைவி சாமரி அத்தப்பத்து 52 (49) ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் மரிஸன்னே கப், சூனே லூஸ் இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

115 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 104 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுத் தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் திரிஷா செட்டி 26 (25), டேன் வான் நிகேர்க் 24 (31) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் சுகந்திகா குமாரி, உதேஷிகா பிரபோதினி இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகியாக, சாமரி அத்தப்பத்து தெரிவானார்.

இதன்மூலம், இத்தொடரில் 4 போட்டிகளில் பங்குபற்றி 2 வெற்றிகளைக் கைப்பற்றிய இலங்கை அணி, சுப்பர் 10 தொடரில் குழு 'ஏ"இல், 3ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .