Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஜூலை 18 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
அயர்லாந்தின் பெல்பாஸ்ட்டில் இடம்பெற்ற அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில், அயர்லாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் எட் ஜொய்ஸுக்கு வழங்கபட்ட ஆட்டமிழப்பு சர்ச்சையாகியுள்ளது.
இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், ஒரு கட்டத்தில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 109 ஓட்டங்களுடன் காணப்பட்ட நிலையில், ரஷீட் கானின் ஆட்டமிழக்காத 60, மொஹம்மட் நபியின் 50 ஓட்டங்கள் கைகொடுக்க 50 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 229 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முன்னதாக, ரஹ்மட் ஷா 48 ஓட்டங்களைப் பெற்றிருந்ததோடு, பந்துவீச்சில் அன்டி மக்பிரைன், பீற்றர் சேஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் 230 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் அயர்லாந்து தமது இன்னிங்ஸை ஆரம்பித்த நிலையில், அயர்லாந்தின் இன்னிங்ஸின் ஆறாவது ஓவரின் ஐந்தாவது பந்திலேயே, சர்ச்சையை தோற்றுவித்த ஆட்டமிழப்பு நிகழ்ந்திருந்தது.
குறித்த பந்தை ஜொய்ஸ் நான்கு ஓட்டங்களுக்கு விரட்டியிருந்த நிலையில், குறித்த பந்தானது எல்லையைத் தாண்டிச் சென்று விட்டது என நினைத்த ஜொய்ஸ் களத்தின் நடுவிலேயே நின்ற நிலையில், குறித்த பந்தினை களத்தடுப்புச் செய்த நபி, அந்தப் பந்தை ரஷீட்டிடம் பரிமாற, அந்த ஓவரை வீசிக் கொண்டிருந்த யமீன் அஹ்மட்ஸாய் விக்கெட்டுகளைத் தகர்த்தார்.
இந்நிலையில், களநடுவர்களாகவிருந்த அலன் நீல், சி.ஷம்ஷூட்டின் ஆகியோர் , ஆட்டமிழப்புக் கோரிக்கையை வாபஸ் பெறுமாறு ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் அஸ்கர் ஸ்டனிஸ்காயை கோரியிருந்த நிலையில், அதை அவர் மறுத்திந்தார். இப்போட்டியில் தொலைக்காட்சி நடுவர் இல்லாத நிலையில், குறித்த ஆட்டமிழப்புக்கு பின்னர், அப்போது துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த அயர்லாந்து அணியின் தலைவர் வில்லியம் ஃபோர்ட்பீல்டுக்கும் ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கும் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றிருந்தது.
இறுதியாக, 41 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 150 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற அயர்லாந்து, 79 ஓட்டங்களால் இப்போட்டியில் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், கெவின் ஓ பிரைன் 34, போல் ஸ்டேர்லிங் 31 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ரஷீட் கான் 4, ரஹ்மட் ஷா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago