2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

'சிரேஷ்ட வீரர்கள் தொடர்ந்தும் விளையாடுவர்'

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 28 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக இருபதுக்கு-20 தொடரை வெற்றிகொள்ளக்கூடிய வாய்ப்புள்ள முக்கியமான அணிகளுள் ஒன்றாக இந்தத் தொடரில் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி, இந்தத் தொடரில் போதுமானளவு சிறப்பான பெறுபேற்றை வெளிப்படுத்தியிருக்கவில்லை.

அதிலும், தென்னாபிரிக்க அணியின் சிரேஷ்ட வீரர்களான ஹஷிம் அம்லா, ஏபி டி வில்லியர்ஸ் போன்றோர் சிறப்பாகச் செயற்படவில்லை என்பதோடு, முன்னணி வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெய்ன், அனேகமான போட்டிகளில் பங்குபற்றியிருக்கவில்லை. அத்தோடு, ஜே.பி டுமினி, இம்ரான் தாஹிர், பப் டு பிளெஸிஸ் போன்றோர் தொடர்பாகவும் கேள்விகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், இந்தத் தொடரைத் தொடர்ந்து, சிரேஷ்ட வீரர்கள் ஓய்வுபெறுவார்களா அல்லது அவர்களது எதிர்காலம் என்ன போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அம்லா, 'எங்களில் பலர், சர்வதேசக் கிரிக்கெட்டில் தொடர்ந்தும் விளையாடுவதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளோம். அது, நாம் மிகவும் களிப்பாகச் செயற்பட்ட ஒன்றாகவும். எங்களால் இன்னும் சில ஆண்டுகள் விளையாட முடியுமென, எங்களில் பலர் நம்புகிறோம்" என்றார்.

அடுத்த உலகக் கிண்ணப் போட்டிகள், 2019ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள நிலையில், அந்தத் தொடரில் பங்குபெற முடிந்தால் சிறப்பாக இருக்குமெனத் தெரிவித்த அம்லா, ஆனால் அதற்கு முன்னதாக, அடுத்தாண்டு இடம்பெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, தென்னாபிரிக்காவின் டெஸ்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டி அணிகளின் தலைவரான ஏபி டி வில்லியர்ஸ், அதிக வேலைப்பளு காரணமாக ஓய்வுபெறுவார் என்ற செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அவற்றை வதந்தி என, அம்லா நிராகரித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .