2021 மார்ச் 04, வியாழக்கிழமை

டிக்வெல்லவின் ஸ்டம்பிங்: கிறீமர் வருத்தம்

Editorial   / 2017 ஜூலை 20 , மு.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான ஒற்றை டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியின் நிரோஷன் டிக்வெல்ல, சர்ச்சைக்குரிய விதத்தில் ஆட்டமிழப்பு வழங்கப்படாமை குறித்து, சிம்பாப்வே அணியின் தலைவர் கிறேம் கிறீமர், தனது வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.

388 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 237 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த போது, நிரோஷன் டிக்வெல்ல மீது, ஸ்டம்பிங் வாய்ப்பொன்று, 3ஆவது நடுவரிடம் கோரப்பட்டது. மீள் ஒளிபரப்புக் காட்சிகளின் போது, டிக்வெல்ல ஆட்டமிழந்துவிட்டார் என்றே கருதப்பட்ட போதிலும், சர்ச்சைக்குரிய விதத்தில், அது ஆட்டமிழப்புக் கிடையாது என, 3ஆவது நடுவர் அறிவித்தார்.  அப்போது 37 ஓட்டங்களுடன் காணப்பட்ட டிக்வெல்ல, இறுதியாக 81 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கை அணியும் வெற்றிபெற்றது.

இந்நிலையில், அது தொடர்பாகக் கேட்கப்பட்டபோது, “நான் பார்த்தவரையில், அவர் ஏன் ஆட்டமிழக்கக்கக்கூடாது என, எனக்கு எந்தச் சந்தேகமும் இருந்திருக்கவில்லை. உங்களிடம் தொழில்நுட்பம் இருந்தால், அது தெளிவாகக் காண்பிக்கும்.

“எங்களுக்கு இவ்வாறானவை, அதிகமாக நடக்கின்றன என நாம் உணர்கிறோம். இவ்வாறான விடயங்கள், எங்களுக்கு எதிராக நடக்கும் போது கடினமானது, குறிப்பாக, இறுதி நாளில் டெஸ்ட் போட்டியொன்றை வெல்வதற்கு முயலும் போது” என்று தெரிவித்தார்.

இப்போட்டி தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், “388 என்பது கடினமானது என எண்ணினோம் - குறிப்பாக இறுதி நாளில். 4ஆம் நாளில், 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தோம், ஆகவே, 7 விக்கெட்டுகளைத் தான் கைப்பற்ற வேண்டியிருந்தது. மாற்றமடையும் உணர்வுகளாக இருந்தன.

“ஆனால், அணி வீரர்கள் விளையாடிய விதம் தொடர்பாகவும் அவர்கள் போராடிய விதம் தொடர்பாகவும், நான் பெருமையடைகிறேன். ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரொன்றை இங்கு வெல்வதற்கு அவர்கள் விளையாடிய விதத்துக்கு, நான் மிகவும் பெருமையடைகிறேன். பின்னர், டெஸ்ட் போட்டியில் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து, கிட்டத்தட்ட வெல்லுமளவுக்குச் சென்றமை, அணி வீரர்களிடமிருந்து சிறப்பான பெறுபேறாகும்” என்று அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .