Shanmugan Murugavel / 2016 ஜூலை 12 , பி.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரி மோசடி தொடர்பான குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பார்சிலோனா கால்பந்தாட்டக் கழகத்தைச் சேர்ந்த லியனல் மெஸ்ஸி, பார்சிலோனாவை விட்டுச் செல்ல மாட்டார் என்ற உறுதியான நம்பிக்கை இருப்பதாக, அக்கழகம் தெரிவித்துள்ளது.
வரி மோசடிக்காக மெஸ்ஸிக்கும் அவரது தந்தைக்கும் 21 மாதங்களுக்குச் சிறைத்தண்டனை விதித்த பார்சிலோனாவைச் சேர்ந்த நீதிமன்றமொன்று, மெஸ்ஸிக்கு 2.2 மில்லியன் அமெரிக்க டொலர்களும் அவரது தந்தைக்கு 1.65 மில்லியன் அமெரிக்க டொலர்களும் அபராதமாக விதித்திருந்தது.
ஸ்பானிய சட்டங்களின்படி, முதற்குற்றமாக வன்முறையோடு சம்பந்தப்படாத குற்றத்தை மேற்கொண்ட ஒருவருக்கு, 2 ஆண்டுகளுக்கும் குறைவான சிறை வழங்கப்பட்டால், அவர் சிறைக்குச் செல்லத் தேவையில்லை. எனவே, மெஸ்ஸியும் அவரது தந்தையும், சிறைக்குச் செல்ல வேண்டிய தேவை கிடையாது. அத்தோடு, இந்தத் தீர்ப்பு எதிராக, உச்ச நீதிமன்றத்திலும் அவர்களிருவரும் மேன்முறையீடு செய்துள்ளனர்.
இந்நிலையில், மெஸ்ஸியின் தந்தையும் மெஸ்ஸியின் முகவரும், செல்சி கால்பந்தாட்டக் கழகத்தின் உரிமையாளர் றோமன் ஏப்ராமோவிச்சை, அவரது சொகுசுப் படகில் வைத்துச் சந்தித்ததாக, இங்கிலாந்தைச் சேர்ந்த ஊடகங்கள் தெரிவித்திருந்தன. இதனால், சிறுவயது முதல் விளையாடிவரும் பார்சிலோனா கழகத்தை விட்டு, செல்சி அணிக்குச் செல்வதற்கு மெஸ்ஸி முயல்கிறாரா என்ற சந்தேகம் எழுந்திருந்தது.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள பார்சிலோனா அணியின் பேச்சாளர் ஜோசப் விவ்ஸ், "அவரோடு கூட இருப்பவர்களோடு நாம் தொடர்புகளைத் தொடர்ந்தும் பேணி வந்துள்ளோம். கழகத்தை விட்டு மெஸ்ஸி விலக விரும்புகிறார் என நாம் அறியவில்லை. அந்த உணர்வு, எங்களுக்கு ஏற்படவே இல்லை" என்றார். மேலும் கருத்துத் தெரிவித்த அவர், "இது குறித்து நாம் கவலைப்படவில்லை. எங்களுக்குக் கிடைத்த எந்தத் தகவலும், அவ்வாறான சாத்தியப்பாடு குறித்துத் தெரிவிக்கவில்லை" என்று தெரிவித்தார்.
மெஸ்ஸிக்கு ஆதரவாக, "நாம் எல்லோரும் லியோ மெஸ்ஸி" என்ற சமூக வலைத்தளப் பிரசாரத்தை, பார்சிலோனா மேற்கொண்டுவரும் நிலையில், அதில் இணைந்து, மெஸ்ஸிக்கு ஆதரவளிக்கும்படி, விவ்ஸ் கோரி நின்றார். "இது மிகவும் எளிமையான பிரசார இயக்கம். ஆனால், அவருக்கு நாம் எந்தளவுக்கு ஆதரவாக உள்ளோம் என்பதை இது வெளிப்படுத்தும்" என அவர் தெரிவித்தார்.
இதற்கு மேலதிகமாக, மெஸ்ஸிக்குத் தொடர்ந்தும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் கழகத்தின் நடைமுறையை, விவ்ஸ் தொடர்ந்தார். "இந்த ஒப்பந்தங்களையெல்லாம் கைச்சாத்திடும் போது, 19 வயதானவராக இருந்த மெஸ்ஸியைப் பற்றி நாம் கதைக்கிறோம். அத்தோடு, அவற்றின் விவரங்கள் குறித்து மெஸ்ஸிக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. கால்பந்தாட்டத்தில் கவனம் செலுத்திய அவர், அவரது ஆலோசகர்களால் சொல்லப்பட்டதன்படி, அனைத்து ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திட்டார்" என அவர் இதன்போது தெரிவித்தார்.
46 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
59 minute ago
1 hours ago