Gopikrishna Kanagalingam / 2017 மே 17 , பி.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட் அணியின் இளம் வீரரான வொஷிங்டன் சுந்தரின் சிறப்பான பந்துவீச்சின் உதவியுடன், அவ்வணி, இவ்வாண்டுக்கான இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும் முதலாவது அணியாக மாறியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக, மும்பை - வன்கெடே மைதானத்தில் நேற்று இரவு இடம்பெற்ற போட்டியில் வெற்றிபெற்றே, இந்த வாய்ப்பை, பூனே அணி பெற்றுக் கொண்டது.
முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட பூனே அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது.
18 ஓவர்களின் நிறைவில், 3 விக்கெட்டுகளை இழந்து 121 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவ்வணி, இறுதி 2 ஓவர்களிலும் 41 ஓட்டங்களைக் குவித்ததன் விளைவாக, போட்டித்தன்மை மிக்க ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் மனோஜ் திவாரி 58 (48), அஜின்கியா ரஹானே 56 (43) ஓட்டங்களைப் பெற, 5 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 26 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களை, மகேந்திரசிங் டோணி பெற்றுக் கொடுத்தார்.
பந்துவீச்சில் லசித் மலிங்க, 3 ஓவர்களில் 14 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.
163 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மும்பை அணி, வேகமான ஆரம்பத்தைப் பெற்ற போதிலும், 4.3 ஓவர்களில் 35 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, முதலாவது விக்கெட்டை இழந்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த அணி, 8 விக்கெட்டுகளை இழந்து 111 ஓட்டங்கள் என்ற நிலைக்கு வந்தது. இறுதியில், 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 142 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 20 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில் பார்த்திவ் பட்டேல், 52 (40) ஓட்டங்களைப் பெற்றார். வேறு எவரும், 20 ஓட்டங்களைப் பெறவில்லை. பந்துவீச்சில் வொஷிங்டன் சுந்தர், 4 ஓவர்களில் 16 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஷர்டுல் தாக்கூர், 4 ஓவர்களில் 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இப்போட்டியின் நாயகனாக, 17 வயதேயான வொஷிங்டன் சுந்தர் தெரிவானார். இதன்மூலம், ஐ.பி.எல் போட்டியொன்றில், போட்டியின் நாயகன் விருதைப் பெற்ற இளைய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
இறுதிப் போட்டி, ஹைதரபாத்தில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026