2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம்: இலங்கைக் கிரிக்கெட் சபை

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 10 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையைச் சேர்ந்த 3 நடுவர்கள் உட்பட 6 கிரிக்கெட் நடுவர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு தவறான தீர்ப்புக்களையும், போட்டி பற்றிய தகவல்களையும் வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக வெளியான தகவலை அடுத்து அதுகுறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கைக் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள இலங்கைக் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஜித் ஜெயசேகர, ஆரம்பகட்ட விசாரணைகள் இலங்கைக் கிரிக்கெட் சபையின் ஊழலொழிப்புப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பாக நடுவர்களைத் தாங்கள் இன்னமும் தொடர்பு கொள்ளவில்லை எனத் தெரிவித்த அஜித் ஜெயசேகர, முதலில் ஆரம்பகட்ட விசாரணைகளை நடாத்த விரும்புவதாகத் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக நேற்றுக் கருத்துத் தெரிவித்த இலங்கைக் கிரிக்கெட் சபையின் செயலாளர் நிஷாந்த ரணதுங்க, இலங்கையின் நடுவர்கள் மீது இலங்கைக் கிரிக்கெட் சபைக்கு நம்பிக்கை காணப்படுவதாகவும், விசாரணைகளை நடத்தாமல் அதுகுறித்த கருத்துக்களை இலங்கைக் கிரிக்கெட் சபை வெளியிடாது எனத் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும் குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் பேச்சாளர் ஒருவர் அதை உறுதிப்படுத்தியதோடு, சர்வதேசக் கிரிக்கெட் சபையிடம் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் இலங்கையைச் சேர்ந்தவர்களான காமினி திஸாநாயக்க, மௌரிஸ் வின்ஸ்டன், சாகர கலகே ஆகியோரும், பாகிஸ்தானைச் சேர்ந்த நதீம் கௌரி, அன்னீஸ் சித்திக்கி ஆகியோரும், பங்களாதேஷைச் சேர்ந்த நதீர் ஷா என்ற நடுவரும் அகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .