2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

மூன்றாம் நாள் முடிவில் அவுஸ்ரேலியாவிற்கு எதிராக தென்னாபிரிக்கா ஆதிக்கம்

Super User   / 2012 நவம்பர் 11 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்ரேலியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கும் அவுஸ்ரேலிய அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ற் தொடரின் முதலாவது போட்டியின் மூன்றாம் நாள் முடிவில் தென்னாபிரிக்க அணி தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 255 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் இன்றைய நாள் ஆட்டத்தை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 450 ஓட்டங்களைப் பெற்றது.

இன்றைய நாள் ஆட்டம் ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே ஹசிம் அம்லா ஆட்டமிழந்த போதிலும் ஜக்ஸ் கலிஸ் மிகச்சிறப்பாக ஆடி தனது 44ஆவது டெஸ்ற் சதத்தைப் பூர்த்தி செய்தார். துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணி சார்பாக ஜக்ஸ் கலிஸ் 147 ஓட்டங்களையும் ஹசிம் அம்லா 104 ஓட்டங்களையும் அல்விரோ பீற்றர்சன் 64 ஓட்டங்களையும் ஏ.பி.டி.வில்லியர்ஸ் 40 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அவுஸ்ரேலிய அணி சார்பாக ஜேம்ஸ் பற்றின்சன் 3 விக்கெட்டுக்களையும் பென் ஹில்பன்ஹோஸ் பீற்றர் சிடில் நேதன் லையன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இதன் பின்னர் தனது முதலாவது இனிங்ஸை ஆரம்பித்த அவுஸ்ரேலிய அணி இன்றைய நாள் முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 111 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முதலாவது விக்கெட்டை 13 ஓட்டங்களுக்கே இழந்த அவ்வணி, அதன் பின்னர் 3 விக்கெட்டுக்களை இழந்து 40 ஓட்டங்களைப் பெற்றுத் தடுமாறியது.

அதன் பின் எட் கொவான் மற்றும் மைக்கல் கிளார்க் இருவரும் பிரிக்கப்படாத 61 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்ரேலிய அணியைச் சற்று ஸ்திரப்படுத்தினர். துடுப்பாட்டத்தில் அவுஸ்ரேலிய அணி சார்பாக எட் கொவான் ஆட்டமிழக்காமல் 49 ஓட்டங்களையும் மைக்கல் கிளார்க் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

இப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழை காரணமாக முற்றாக இடம்பெறவில்லை என்பதோடுஇ தென்னாபிரிக்க அணியின் ஜே.பி.டுமினி காயமடைந்துள்ளதால் தென்னாபிரிக்க அணி சார்பாக 10 வீரர்கள் மாத்திரமே துடுப்பெடுத்தாடியமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .