2021 ஜனவரி 20, புதன்கிழமை

பிக்பாஷ் தொடர்பான எதிர்பார்ப்புடன் முரளி

A.P.Mathan   / 2012 நவம்பர் 15 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவின் டுவென்டி டுவென்டி தொடரான பிக்பாஷ் லீக் தொடரில் பங்குபற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், உலக சாதனையாளருமான முத்தையா முரளிதரன், பிக்பாஷ் லீக் தொடர்பான எதிர்பார்ப்புகளுடன் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

800 டெஸ்ட் விக்கெட்டுக்களைக் கைப்பற்றி இலகுவில் எட்டமுடியாத சாதனைகளுக்குச் சொந்தக்காரராக விளங்கும் முத்தையா முரளிதரன், முதன்முறையாக அவுஸ்திரேலியாவின் உள்ளூர் தொடரொன்றில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் வைத்து இலங்கைக்காக போட்டிகளில் பங்குபற்றும் போது பந்தை எறிகிறார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட சர்ச்சைகளுக்குள்ளான நிலையில் அவுஸ்திரேலியாவில் போட்டிகளில் பங்குபற்றுவது பற்றிக் கேட்கப்பட்டபோது, பழையவற்றை நினைத்துக் கொண்டிருக்க முடியாது எனவும், நடந்து முடிந்தவை நடந்து முடிந்தவையாகவே அமையட்டும் எனவும் முரளி தெரிவித்தார்.

பிக்பாஷ் லீக் தொடர் போட்டித்தன்மை வாய்ந்ததாக அமையும் எனக் கருதுவதாகத் தெரிவித்த முத்தையா முரளிதரன், இத்தொடரில் பங்குபற்றுவது குறித்து எதிர்பார்ப்புகளுடன் காணப்படுவதாகத் தெரிவித்தார்.

தற்போது 40 வயதாகும் முத்தையா முரளிதரன், ஒரு வீரர் சிறப்பாகப் பிரகாசித்துக் கொண்டிருப்பாரானால் அவரது வயது அவசிமானதொன்றல்ல என்பதே தனது கொள்கை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மெல்பேர்ணை அடிப்படையாகக் கொண்டுள்ள மெல்பேர்ண் ரெனிகேட்ஸ் அணிக்காக முத்தையா முரளிதரன் பங்குபெறவுள்ள அதேவேளை, மெல்பேர்ணை அடிப்படையாகக் கொண்ட மெல்பேர்ண் ஸ்ரார்ஸ் அணிக்காக ஷேன் வோண் போட்டிகளில் பங்குபற்றவுள்ளார்.

இந்நிலையில் அவர் சிறந்த வீரர் எனத் தெரிவித்த முத்தையா முரளிதரன், அவர் பந்துவீசுவதைப் பார்க்க ஆவலுடன் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .