2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

இலங்கைக் கிரிக்கெட் நிர்வாகத்தைச் சாடுகிறார் ஹரூன் லோகார்ட்

A.P.Mathan   / 2012 நவம்பர் 21 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக் கிரிக்கெட் சபையின் நிர்வாகத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமென சர்வதேசக் கிரிக்கெட் சபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹரூன் லோகார்ட் தெரிவித்துள்ளார். இலங்கைக் கிரிக்கெட் சபைக்கு வழங்கியுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சர்வதேசக் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரிப் பதவியிலிருந்து ஓய்வுபெற்றதும் இலங்கையின் கிரிக்கெட் நிர்வாகத்தில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்களைப் பிரேரிப்பதற்காக இலங்கைக் கிரிக்கெட் சபையால் பணிக்கமர்த்தப்பட்ட ஹரூன் லோகார்ட், தனது இறுதி அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கைக் கிரிக்கெட் சபை அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள், இலங்கையின் வீரர்கள், இலங்கையின் முன்னாள் வீரர்கள், ஊடகவியலாளர்கள், ரசிகர்கள் ஆகியோரிடம் கருத்துக்களைக் கேட்டறிந்த ஹரூன் லோகார்ட், தனது 10 பக்க அறிக்கையைக் கையளித்துள்ளார்.

அவர் வழங்கியுள்ள பிரேரிப்புக்களில் இலங்கைக் கிரிக்கெட் அணியின் தேர்வில் விளையாட்டுத்துறை அமைச்சரின் தலையீடு, இலங்கைக் கிரிக்கெட் சபையின் மோசமான பெயர், இலங்கைக் கிரிக்கெட் சபையின் நெருக்கடியான நிதி நிலை, நிர்வாகத்தில் காணப்படும் தொழில்முறையற்ற நடவடிக்கைகள், வெளிப்படையற்ற தன்மை ஆகியன இல்லாது செய்யப்பட வேண்டும் எனவும், முறையான நிறுவன அடிப்படையொன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஹரூன் லோகார்ட்டின் அறிக்கை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த இலங்கைக் கிரிக்கெட் சபையின் செயலாளர் நிஷாந்த ரணதுங்க, அவ்வறிக்கையிலுள்ள பிரேரிப்புக்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனத் தான் தனிப்பட்ட முறையில் கருதுவதாகவும், இலங்கையின் விளையாட்டுக் கழகங்கள், ஊடகங்கள், வீரர்கள், இலங்கைக் கிரிக்கெட் சபை ஆகியன இணைந்து இந்தப் பிரேரிப்புக்களை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .