2021 ஜனவரி 16, சனிக்கிழமை

கிரிக்கெட் சபை விவகாரம் அணியைப் பாதிக்காது: மஹேல

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 25 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக் கிரிக்கெட் சபைக்கும், தனக்கும், அணி முகாமையாளருக்குமிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடு இலங்கை அணியின் பெறுபேறுகளைப் பாதிக்காது எனத் தான் நம்புவதாக இலங்கை அணியின் தலைவர் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கைக் கிரிக்கெட் சபையை விமர்சித்தமைக்காக இலங்கை அணியின் தலைவர் மஹேல ஜெயவர்தன மீதும், மஹேல ஜெயவர்தனவிற்கு துணை புரிந்த இலங்கைக் கிரிக்கெட் அணியின் முகாமையாளர் சரித் சேனநாயக்கவிற்கும் எதிராக விசாரணை மேற்கொள்ளப்படுமென இலங்கைக் கிரிக்கெட் சபை அண்மையில் அறிவித்திருந்தது.

இலங்கைக் கிரிக்கெட் சபைக்கு அவர் அனுப்பிய இரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டதையடுத்து இலங்கைக் கிரிக்கெட் சபை மேல் தான் நம்பிக்கையிழந்து விட்டதாக இலங்கை அணியின் தலைவர் மஹேல ஜெயவர்தன தெரிவித்திருந்தார்.

 உலக டுவென்டி டுவென்டி தொடரில் இலங்கைக்கு பயிற்சிகளை வழங்கிய பயிற்றுவிப்பாளர் மற்றும் ஏனைய ஊழியர்கள் சிலருக்கு ஊக்குவிப்புத் தொகைகளை வழங்குமாறு இலங்கைக் கிரிக்கெட் அணியினர் விடுத்த கோரிக்கையை நிராகரித்திருந்த இலங்கைக் கிரிக்கெட் சபை, அதுகுறித்து ஊடகங்களுக்கு விளக்கங்களை வழங்கியிருந்தது.

உலக டுவென்டி டுவென்டி தொடரில் பங்குபற்றியமைக்காக இலங்கைக் கிரிக்கெட் சபைக்கு சர்வதேசக் கிரிக்கெட் சபைக்கு வழங்கவுள்ள தொகையின் 25 சதவீதம் இலங்கையின் 15 வீரர்களுக்கு வழங்கப்படுவது ஒப்பந்தப்படி கட்டாயமாகும்.

இருந்த போதிலும், இலங்கையின் பயிற்றுவிப்பாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊக்குவிப்பினை வழங்குமாறு மேற்கொண்ட கோரிக்கையை நிராகரிப்பதாகத் தெரிவித்த இலங்கைக் கிரிக்கெட் சபை, இலங்கை வீரர்கள் அனைத்து பயிற்றுவிப்பாளர்களையும் அந்தக் கோரிக்கையில் இணைத்திருக்காததோடு, அதுகுறித்து ஏற்கனவே திட்டமிடல்கள் காணப்படாததால் அவர்களின் கோரிக்கையை நிராகரிப்பதாகத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நாளை ஆரம்பமாகவுள்ள 2வது டெஸ்ற் போட்டிக்கு முன்னதாகக் கருத்துத் தெரிவித்த மஹேல ஜெயவர்தன, இவ்விடயம் இலங்கை அணியைப் பாதிக்காது எனத் தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளார். அத்தோடு இவ்விடயம் விரைவில் தீர்க்கப்படுமெனத் தான் எண்ணுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரகசிய ஆவணத்தை இலங்கைக் கிரிக்கெட் சபையே ஊடகங்களுக்கு வெளியிட்டதாகத் தெரிவித்த மஹேல, இதில் தான் என்ன தவறு செய்தேன் எனப் புரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஏன் இரகசிய ஆவணம் வெளியிடப்பட்டது என்றே தான் வினவியதாகவும், தான் தவறு செய்யவில்லை என்பதை இலங்கைக் கிரிக்கெட் சபை புரிந்து கொண்ட பின்னர் இப்பிரச்சினை விரைவில் தீர்க்கப்படுமெனத் தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .