2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை, அவுஸ்ரேலிய சரித்திரபூர்வ டெஸ்ட் நாளை

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 25 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்ரேலியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும், அவுஸ்ரேலிய அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி நாளை இடம்பெறவுள்ளது.

மெல்பேர்ண் மைதானத்தில் இடம்பெறவுள்ள இப்போட்டி இலங்கை நேரப்படி நாளை காலை 5 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்திருந்த நிலையில், நாளை ஆரம்பிக்கவுள்ள போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால் மாத்திரமே இத்தொடரை வெற்றிகொள்ளும் வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளும்.

கிறிஸ்மஸ் தினத்திற்கு அடுத்த தினமான 26ம் திகதி அவுஸ்ரேலியாவில் இடம்பெறும் பொக்சிங் டே எனப்படும் டெஸ்ட் போட்டிகள் மிக முக்கியமானவையாகக் கருதப்படும் நிலையில், அவ்வாறான போட்டியொன்றில் இலங்கை அணி இரண்டாவது தடவையாகப் பங்குபற்றுகிறது.

இதற்கு முன்னர் 1995ஆம் ஆண்டு இலங்கை அணி பொக்சிங் டே டெஸ்ற் போட்டியில் பங்குபற்றியிருந்த போது இலங்கையின் நட்சத்திரச் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் பந்தை எறிவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன.

இதுவரை அவுஸ்ரேலியாவில் டெஸ்ட் போட்டி எதிலும் வெற்றிகொண்டிருக்காத இலங்கை அணி, தற்போது முரளிதரனின் துணையுமின்றி டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றுகிறது. ஆனால் ரங்கன ஹேரத்தின் அண்மைக்காலமாக பந்துவீச்சுப் பெறுபேறுகள் இலங்கைக்கு நம்பிக்கையளிக்கின்றன.

நாளைய போட்டியில் இலங்கை சார்பாக மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வாய்ப்புக்கள் இல்லையாயினும், கடந்த போட்டியில் துடுப்பெடுத்தாடும் போது உபாதைக்குள்ளான நுவான் குலசேகர சிலவேளைகளில் நிறுத்தப்பட்டு, அவருக்குப் பதிலாக தம்மிக்க பிரசாத் பங்குபற்ற வாய்ப்புக்கள் உள்ளன.

அவுஸ்ரேலிய அணியின் 12 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மைக்கல் கிளார்க்கின் உடற்தகுதி தொடர்பான சந்தேகமே நிலவுகிறது. அவர் பங்குபற்றாவிடின் உஸ்மான் கவாஜா அவருக்குப் பதிலாகப் பங்குபற்றுவார் என்பதோடு, அவுஸ்ரேலிய அணியின் தலைவராக ஷேன் வொற்சன் பணிபுரிவார்.

எதிர்பார்க்கப்படும் அணிகள்:
இலங்கை அணி: திலகரட்ண டில்ஷான், திமுத் கருணாரத்ன, குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன, திலான் சமரவீர, அன்ஜலோ மத்தியூஸ், பிரசன்ன ஜெயவர்தன, நுவான் குலசேகர, ஷமின்ட எரங்க, ரங்கன ஹேரத், சானக வெலகெதர

அவுஸ்ரெலிய அணி:
எட் கொவான், டேவிட் வோணர், பிலிப் ஹியூஸ், ஷேன் வொற்சன், மைக்கல் கிளார்க்/உஸ்மான் கவாஜா, மைக்கல் ஹசி, மத்தியூ வேட், பீற்றர் சிடில், மிற்சல் ஜோன்சன், ஜக்ஸன் பேர்ட், நேதன் லையன்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .