2021 ஜனவரி 15, வெள்ளிக்கிழமை

இந்தியாவிற்கெதிராக பாகிஸ்தான் வெற்றி

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 25 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும், இந்திய அணிக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட டுவென்டி டுவென்டி தொடரின் முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.

பெங்களூர் எம்.சின்னசுவாமி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றது. ஒரு கட்டத்தில் 10.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 77 ஓட்டங்களைப் பெற்றிருந்த இந்திய அணி, அதன் பின்னர் விக்கெட்டுக்களைத் தொடர்ச்சியாக இழந்தது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக கௌதம் கம்பீர் 41 பந்துகளில் 43 ஓட்டங்களையும், அஜின்கியா ரஹானே 31 பந்துகளில் 42 ஓட்டங்களையும் பெற்றனர். இந்திய அணியின் 7 வீரர்கள் ஒற்றைப்படை ஓட்டங்களையே பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக உமர் குல் 3 ஓவர்களில் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், சயீட் அஜ்மல் 4 ஓவர்களில் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், மொஹமட் இர்பான், ஷகிட் அப்ரிடி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

134 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுக்களை இழந்து 12 ஓட்டங்களைப் பெற்றுத் தடுமாறிய பாகிஸ்தான் அணியை மொஹமட் ஹபீஸ், சொய்ப் மலிக் இருவரும் 106 ஓட்ட இணைப்பாட்டத்தைப் புரிந்து கரையேற்றினர்.

இறுதி ஓவரில் 10 ஓட்டங்கள் தேவைப்பட, நான்காவது பந்தை ஆறு ஓட்டங்களுக்கு சொய்ப் மலிக் அடித்து பாகிஸ்தான் அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பாக மொஹமட் ஹபீஸ் 44 பந்துகளில் 61 ஓட்டங்களையும், சொய்ப் மலிக் 50 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக அறிமுக வீரர் புவனேஷ்வர் குமார் 4 ஓவர்களில் 9 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், அக்‌ஷோக் டின்டா, இஷாந்த் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக மொஹமட் ஹபீஸ் தெரிவானார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .