2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

இங்கிலாந்தைத் தோற்கடித்தது நியூசிலாந்து

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 17 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கும், நியூசிலாந்து அணிக்குமிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.

ஹமில்ற்றனில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 258 ஓட்டங்களைப் பெற்றது.

முதலாவது விக்கெட்டை 11 ஓட்டங்களுக்கு இழந்த அவ்வணி, இரண்டாவது விக்கெட்டுக்காக 84 ஓட்டங்களையும், மூன்றாவது விக்கெட்டுக்காக 89 ஓட்டங்களையும் பகிர்ந்திருந்தனர். ஆனால் இறுதி நேரத்தில் விக்கெட்டுக்கள் விரைவாக வீழ்த்தப்பட்டிருந்தன.

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பாக ஜொனதன் ட்ரொட் 90 பந்துகளில் 68 ஓட்டங்களையும், இயன் பெல் 79 பந்துகளில் 64 ஓட்டங்களையும், ஜோ ரூட் 64 பந்துகளில் 56 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக மிற்சல் மக்லநகன் 56 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், ஜேம்ஸ் ஃபிராங்ளின் 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், கைல் மில்ஸ் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், அன்ட்ரூ எலிஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

259 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 48.5 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
முதலாவது விக்கெட்டை 2 ஓட்டங்களுக்கே இழந்ததோடு, ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுக்களை இழந்து 186 ஓட்டங்களையும், 7 விக்கெட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களையும் பெற்றிருந்த போதிலும், 8வது விக்கெட்டுக்காகப் பிரிக்கப்படாத 41 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பாக கேன் வில்லியம்ஸன் 99 பந்துகளில் 74 ஓட்டங்களையும், பிரென்டன் மக்கலம் 61 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்களையும் பெற்றதோடு, மார்ட்டின் கப்ரில் ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களையும் பெற்றிருந்தார்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக கிறிஸ் வோக்ஸ் 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், ஜேம்ஸ் அன்டர்சன், ஸ்டீவன் ஃபின், ஸ்ருவேர்ட் ப்ரோட், கிரேம் ஸ்வான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--