2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

பங்களாதேஷ் பிரீமியர் லீக் சம்பியன்களாக டாக்கா கிளேடியேற்றர்ஸ்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 20 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரின் சம்பியன்களாக டாக்கா கிளேடியேற்றர்ஸ் அணி தெரிவாகியுள்ளது.

நேற்று இடம்பெற்ற சிற்றகொங் கிங்ஸ் அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் டாக்கா கிளேடியேற்றர்ஸ் அணி 43 ஓட்டங்களால் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றது.

இரண்டாவது முறையாக இடம்பெற்ற பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற டாக்க கிளேடியேற்றர்ஸ் அணியே முதலாவது தொடரிலும் சம்பியன் பட்டம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மிர்புரில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற சிற்றகொங் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டாக்கா கிளேடியேற்றர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

முதலாவது விக்கெட்டாக திலகரட்ண டில்ஷானை முதலாவது ஓவரிலேயே இழந்தபோதிலும், அவ்வணியின் ஏனைய வீரர்கள் சிறப்பாக ஆடி, மிகச்சிறப்பான ஓட்ட எண்ணிக்கையொன்றைப் பெற்றுக் கொண்டார்கள்.

துடுப்பாட்டத்தில் டாக்கா கிளேடியேற்றர்ஸ் அணி சார்பாக அனாமுல் ஹக் 36 பந்துகளில் 58 ஓட்டங்கரைளயும் ஷகிப் அல் ஹசன் 29 பந்துகளில் 41 ஓட்டங்களையும் மொஹமட் அஷ்ரபுல் 16 பந்துகளில் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சிற்றகொங் கிங்ஸ் அணி சார்பாக றூபெல் ஹொசைன் 4 விக்கெட்டுக்களையும் தில்ஹார லொக்குஹெட்டிகே, தஸ்கின் அஹமட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் ரவி போப்பாரா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

173 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சிற்றகொங் கிங்ஸ் அணி 16.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 129 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 43 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

முதலாவது விக்கெட்டுக்காக வேகமான 26 ஓட்டங்கள் பகிரப்பட்டு, ஒரு கட்டத்தில் 6.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 51 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோதிலும், அதனைத் தொடர்ந்து விக்கெட்டுக்கள் தொடர்ச்சியாக இழக்கப்பட்டிருந்தன.

துடுப்பாட்டத்தில் சிற்றகொங் கிங்ஸ் அணி சார்பாக மகமதுல்லா 28 பந்துகளில் 44 ஓட்டங்களையும் ஜேசன் றோய் 28 பந்துகளில் 40 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் டாக்கா கிளேடியேற்றர்ஸ் அணி சார்பாக மொஷாராப் ஹொசைன், அல்போன்ஸோ தோமஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும் மஷ்ரபி மோர்தஷா, சக்லைன் சஜிப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக மொஷராப் ஹொசைன் தெரிவானதோடு, போட்டித் தொடரின் நாயகனாக ஷகிப் அல் ஹசன் தெரிவானார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--