2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

கனடாப் பெண்கள் அணியை வென்றது இலங்கைப் பெண்கள் அணி

A.P.Mathan   / 2013 ஜூலை 24 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்கள் உலக டுவென்டி டுவென்டி தொடருக்கான அணிகளைத் தெரிவதற்காக இடம்பெற்றுவரும் தகுதிகாண் போட்டிகளில் இலங்கை அணி தனது முதலாவது போட்டியில் வெற்றிபெற்றுள்ளது. கனடா அணிக்கெதிரான போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது.
 
அயர்லாந்து, டப்ளினில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற கனடா அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
 
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி 17.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து வெறுமனே 44 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. ஆரம்பத்திலிருந்தே விக்கெட்டுக்களை இழந்த அவ்வணியால், போட்டியிடத்தக்க ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றுக்கொள்ள முடிந்திருக்கவில்லை.
 
கனடா அணி சார்பாக அதிகபட்சமாக சுதர்ஷினி சிவாநந்தன் 13 ஓட்டங்களைப் பெற்றார். இவர் கொழும்பில் பிறந்து, இலங்கை சார்பாக இதற்கு முன்னர் 27 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைத் தவிர அடுத்த அதிகபட்ச ஓட்டங்களை இலங்கையில் பிறந்த மற்றொருவரான விஜயவாணி விதானகே பெற்றார். அவர் 8 ஓட்டங்களைப் பெற்றார்.
 
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக சன்டிமா குணரத்ன 4 ஓவர்களில் 6 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், சண்டமாலி டொவத்த 3 ஓவர்களில் 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும்,ஶ்ரீபாலி வீரக்கொடி 4 ஓவர்களில் 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், ஒஷாடி ரணசிங்க ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
 
45 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்ட துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 6.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
 
இலங்கை சார்பாக இஷானி கௌஷல்யா 6 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 17 ஓட்டங்களையும், யசோதா மென்டிஸ் 16 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 17 ஓட்டங்களையும் பெற்றனர்.
 
பந்துவீச்சில் கனடா அணி சார்பாக வீழ்த்தப்பட்ட விக்கெட்டை மிக்கேலா ரூரிக் கைப்பற்றினார்.
 
இப்போட்டியின் நாயகியாக இலங்கையின் சண்டிமா குணரத்ன தெரிவானார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--