2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

மேற்கிந்திய தீவுகளை இறுதிப் பந்தில் தோற்கடித்தது பாகிஸ்தான்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 28 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது.

இறுதிப் பந்தில் இவ்வெற்றி பெறப்பட்டிருந்தது.

சென் வின்சன்ற் இல் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது.
முதல் விக்கெட்டை முதலாவது ஓவரிலேயே இழந்த அவ்வணி, கிறிஸ் கெயிலை 3ஆவது ஓவரில் இழந்ததோடு 4 விக்கெட்டுக்களை இழந்து 42 ஓட்டங்களுடன் தடுமாறியது.

அதன் பின்னர் மெதுவான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவ்வணி, இறுதி நேரத்தில் டெரன் சமியின் அதிரடியால் 152 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக கெரான் பொலார்ட் 36 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 49 ஓட்டங்களையும் டெரன் சமி 14 பந்துகளில் 30 ஓட்டங்களையும் மார்லன் சாமுவேல்ஸ் 22 பந்துகளில் 25 ஓட்டங்களையும் டுவைன் பிராவோ 35 பந்துகளில் 25 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக அறிமுக வீரர் ஸூல்பிகர் பாபர் 3 விக்கெட்டுக்களையும் மொஹமட் ஹபீஸ் 2 விக்கெட்டுக்களையும் மொஹமட் இர்பான் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

153 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, இறுதிப் பந்தில் வெற்றி பெற்றது. 8 விக்கெட்டுக்களை இழந்து இந்த வெற்றி பெறப்பட்டது.

2 விக்கெட்டுக்களை இழந்து 10 ஓட்டங்களுடனும் 6 விக்கெட்டுக்களை இழந்து 116 ஓட்டங்களுடன் தடுமாறிய பாகிஸ்தான் அணியை, ஷகிட் அப்ரிடியின் இறுதி நேர அதிரடி காப்பாற்றியது.

இறுதி ஓவரில் 6 ஓட்டங்களும் இறுதிப் பந்தில் ஓர் ஓட்டமும் தேவைப்பட, அறிமுக வீரர் ஸூல்பிகர் பாபர் இறுதிப் பந்தை 6 ஓட்டங்களுக்கு அடித்தார்.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பாக உமர் அமின் 34 பந்துகளில் 47 ஓட்டங்களையும் ஷகிட் அப்ரிடி 27 பந்துகளில் 46 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக ஷனொன் கப்றியல் 3 விக்கெட்டுக்களையும் சாமுவேல் பத்ரி, சுனில் நரைன், மார்லன் சாமுவேல்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக ஷகிட் அப்ரிடி தெரிவானார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X