2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

ஹங்கேரி ஃபோர்மியுலா வன் கார் பந்தயத்தில் லூயிஸ் ஹமில்டன் வெற்றி

A.P.Mathan   / 2013 ஜூலை 29 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ச.சேகர்

ஹங்கேரியின் புதாபெஸ்ட் கார் பந்தய திடலில் இடம்பெற்ற 2013ஆம் ஆண்டின் 10ஆவது சுற்று ஃபோர்மியுலா வன் போட்டியில் மேர்சடீஸ் அணியின் லூயிஸ் ஹமில்டன் முதலிடத்தை பெற்று வெற்றியீட்டினார். இரண்டாமிடத்தை லோட்டஸ் அணியின் கிமி ரைக்கனனும், மூன்றாமிடத்தை நடப்பு உலக சம்பியனான ரெட்புள் ரேசிங் அணியின் செபாஸ்டியன் வெட்டலும் பெற்றனர். 
 
போட்டியின் தகுதி காண் சுற்றின்போது முதலாவது இடத்தை லூயிஸ் ஹமில்டன் எதிர்பாராத விதமாக பதிவு செய்திருந்தார். வார இறுதியின் இடம்பெற்ற பயிற்சி மற்றும் தகுதி காண் சுற்றுகளின் போது, லோட்டஸ் மற்றும் ரெட்புள் ரேசிங் அணியினர் தமது ஆதிக்கத்தை செலுத்தியிருந்தனர். ஆயினும், வெப்பநிலை மற்றும் களநிலைகளை நன்கு ஆராய்ந்து தமது போட்டி வியூகத்தை முன்னெடுத்திருந்த மேர்சடீஸ் அணியினர் போட்டியின் ஆரம்பம் முதல் தமது ஆதிக்கத்தை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தனர்.
 
லோட்டஸ் அணியின் ரொமெய்ன் குரோஜோன் மற்றும் மெக்லாரன் மேர்சடீஸ் அணியின் ஜென்சன் பட்டன் ஆகியோரின் காருக்கிடையில் இடம்பெற்ற மோதல் மற்றும் விதிமுறைகளுக்கு மாறாக பெர்ராரி அணியின் பெர்ணான்டோ அலொன்சோவை கடந்து சென்றமை போன்ற காரணிகளால் முதல் மூன்று நிலைகளில் நிறைவு செய்ய வேண்டிய தமது போட்டியை லோட்டஸ் அணியின் ரொமெய்ன் குரோஜோன் தவறவிட்டிருந்தார். இவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 
70 சுற்றுக்களைக் கொண்ட போட்டியின் 65ஆவது சுற்றில் என்ஜின் அதிகளவு வெப்பமடைந்ததன் காரணமாக மேர்சடீஸ் அணியின் நிகோ ரொஸ்பேர்க் தமது போட்டியை பாதியிலேயே இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. இந்தியாவின் முன்னணி வர்த்தகரான விஜய் மால்யாவின் அணியான ஃபோர்ஸ் இந்தியா அணியினர் இந்த போட்டியில் பெருமளவு பின்னடைவை எதிர்நோக்கியிருந்தனர். 
 
நடப்பு ஆண்டின் வசந்தகால பருவத்துக்கான விடுமுறை நேற்றைய போட்டியுடன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த சுற்றுப் போட்டிகள் ஓகஸ்ட் மாதம் 23ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை பெல்ஜியம் நாட்டின் ஸ்பா-ஃப்ரான்கோர்சம்ப்ஸ் கார் பந்தய திடலில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
10ஆம் சுற்று போட்டி நிறைவில், இந்த ஆண்டின் சம்பியன்சிப் புள்ளி தரப்படுத்தலில் நடப்பு உலக சம்பியனும் ரெட்புள் ரேசிங் அணியின் வீரருமான செபாஸ்டியன் வெட்டல் 172 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளார், இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களை முறையே லோட்டஸ் அணியின் கிமி ரைக்கனன் (134 புள்ளிகள்) மற்றும் பெர்ராரி அணியின் பெர்ணான்டோ அலொன்சோ (133 புள்ளிகள்) பெற்றுள்ளனர். 
 
அணிகள் தரப்படுத்தலில் ரெட்புள் ரேசிங் அணி 277 புள்ளிகளுடன் முதலிடத்திலும், மேர்சடீஸ் அணி 208 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், பெர்ராரி அணி 194 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன.
 
இந்த ஆண்டின் இறுதியுடன் ரெட்புள் ரேசிங் அணியின் வீரரான மார்க் வெபர் ஓய்வு பெறுவது குறித்து அறிவித்துள்ளதை தொடர்ந்து, ஃபோர்மியுலா வன் போட்டிகளில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வரும் ரெட்புள் ரேசிங் அணியில் 2014ஆம் ஆண்டு பருவத்தில் நடப்பு சம்பியன் செபாஸ்டியன் வெட்டலுடன் அணியில் பங்கேற்கும் மற்றைய வீரர் யார் என்பது குறித்த அறிவித்தல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது லோட்டஸ் அணியில் உள்ள கிமி ரைக்கனன் இந்த இடத்துக்கு தெரிவாகலாம் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X