2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

தென்னாபிரிக்காவிற்கெதிராக பாகிஸ்தானுக்கு இலகுவான வெற்றி

Kogilavani   / 2013 ஒக்டோபர் 18 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு இராச்சியத்திற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கும், பாகிஸ்தான் அணிக்குமிடையிலான முதலாவது டெஸ்ற் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்களால் இலகுவான வெற்றியைப் பெற்றுள்ளது.

அபுதாபியில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி ஹசிம் அம்லாவின் 118 ஓட்டங்கள், ஜே.பி.டுமினியின் 57 ஓட்டங்களின் துணையோடு 249 ஓட்டங்களைப் பெற்றது.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக மொஹமட் இர்பான், சுல்பிகர் பாபர் இருவரும் தலா 3 விக்கெட்டுக்களையும், சயீட் அஜ்மல் 2 விக்கெட்டுக்களையும், ஜுனைட் கான் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தனது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி குர்றாம் மன்சூரின் 146 ஓட்டங்கள், மிஸ்பா உல் ஹக்கின் 100 ஓட்டங்கள், ஷான் மசூத்தின் 75 ஓட்டங்கள், அசத் ஷபீக்கின் 54 ஓட்டங்களின் துணையோடு 442 ஓட்டங்களைப் பெற்றது.

பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக டேல் ஸ்ரெய்ன், வேர்ணன் பிலாந்தர் இருவரும் தலா 3 விக்கெட்டுக்களையும், ஜே.பி.டுமினி 2 விக்கெட்டுக்களையும், மோர்னி மோர்க்கல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தனது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி ஏபி.டி.வில்லியர்ஸின் 90 ஓட்டங்கள், றொபின் பீற்றர்சனின் ஆட்டமிழக்காத 47 ஓட்டங்கள், கிறேம் ஸ்மித்தின் 32 ஓட்டங்களின் துணையோடு 232 ஓட்டங்களைப் பெற்றது.
பந்துவீச்சில் சயீட் அஜ்மல் 4 விக்கெட்டுக்களையும், ஜுனைட் கான் 3 விக்கெட்டுக்களையும், சுல்பிகர் பாபர் 2 விக்கெட்டுக்களையும், மொஹமட் இர்பான் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

40 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 45 ஓட்டங்களைப் பெற்றது. மிஸ்பா உல் ஹக் 26 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக வேர்ணன் பிலாந்தர் 2 விக்கெட்டுக்களையும், டேல் ஸ்ரெய்ன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக குர்றாம் மன்சூர் தெரிவானார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--