2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

அரவிந்தகுமாருக்கு அதிரடித் தடை

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 25 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன், எஸ்.கணேசன்

மலையக மக்கள் முன்னணி, மலையக தொழிலாளர் முன்னணி ஆகியவற்றின்  அரசியல் துறை தலைவரும் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அ.அரவிந்தகுமார், கட்சியின் தீர்மானத்தையும் மீறி அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தமை தொடர்பில், 14 நாள்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று, கட்சியின் மத்தியக் குழு அறிவித்துள்ளது.

அதுவரை அவர், மலையக மக்கள் முன்னணி, மலையக தொழிலாளர் முன்னணி சார்பாக தொழிற்சங்க அரசியலில் ஈடுபட முடியாது என்றும் மத்தியக் குழு  தீர்மானித்துள்ளதாக, கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன்  தெரிவித்தார். 

அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தமைக்காக அரவிந்தகுமார் எம்.பி கட்சிக்குள் நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளார்.  அத்துடன் தமிழ் முற்போக்குக் கூட்டணியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பில் ஆராய்வதற்காக,  மலையக மக்கள் முன்னணியின் மத்தியக் குழு, கொட்டகலையிலுள்ள விருந்தகத்தில் இன்று (25) கூடியதுடன், அவரிடமிருந்து விளக்கம் கோருவதற்கும் தீர்மானித்துள்ள. 

அவரது விளக்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணியின் பதுளை மாவட்ட தொழிற்சங்க உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும்  என்று, கட்சியின் தலைவரும் எம்.பியுமான வே.இராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்துரைத்த வே.இராதாகிருஷ்ணன் எம்.பி, அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிப்பதென மலையக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகியன தீர்மானித்திருந்தன என்றும் இந்நிலையில் இம்முடிவைமீறி சட்டமூலத்துக்கு ஆதரவாக அரவிந்தகுமார் எம்.பி., வாக்களித்தது தொடர்பில் மத்தியகுழு கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டதாகவும் தெரிவித்தார். 

'இந்தக் கூட்டத்தில், பதுளை மாவட்ட உறுப்பினர்களை முக்கியமாக அழைத்திருந்தோம். கொரோனா நெருக்கடி நிலையைக் கருத்திற்கொண்டு 60 பேர் வரையே பங்கேற்றனர். 

'அந்தவகையில் இவ்விடயம் தொடர்பில் அரவிந்தகுமார் எம்.பியிடம் விளக்கம் கோருவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. 14 நாள்களுக்குள் அவர் உரிய விளக்கத்தை முன்வைக்க வேண்டும். மத்திய செயற்குழுவின் இந்த முடிவு செயலாளர் ஊடாக அரவிந்தகுமார் எம்.பிக்கு அனுப்பி வைக்கப்படும்.

'14 நாள்களுக்குப் பின்னர் மத்திய குழுவும், கவுன்ஸிலும் மீண்டும் கூடும். அவர் விளக்கமளித்திருக்கும் பட்சத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அதுவரையில் மலையக மக்கள் முன்னணி, மலையக தொழிலாளர் முன்னணி ஆகியவற்றின் செயற்பாடுகளில் அவர் ஈடுபடக்கூடாது' என முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

'அரசியல்வாதிகளுக்கு தனிப்பட்ட நிலைப்பாடுகள் இருக்கலாம், ஆனால் கட்சி, கட்டமைப்பு என வரும்போது கூட்டாக எடுக்கும் முடிவுக்கு உடன்பட வேண்டும்' என்று தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--