2020 ஜூன் 01, திங்கட்கிழமை

அதிக ஓட்டங்கள் குவித்தவராக கோலி

Editorial   / 2019 செப்டெம்பர் 19 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்தவராக இந்திய அணியின் தலைவர் விராத் கோலி மாறியுள்ளார்.

இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், மொஹாலியில் நேற்றிரவு இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் பெற்ற ஆட்டமிழக்காத 72 (52) ஓட்டங்களுடனேயே இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் அதிக ஓட்டங்களைப் பெற்றவராக விராத் கோலி மாறியுள்ளார்.

முன்னதாக, இந்திய அணியின் உப தலைவரான ரோஹித் ஷர்மாவே இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் அதிக ஓட்டங்களைப் பெற்றவராகக் காணப்பட்டிருந்த நிலையில் அவரையே விராத் கோலி முந்தியுள்ளார்.

இதுவரையில் 71 இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள விராத் கோலி 66 இனிங்ஸ்களில் 50.85 என்ற சராசரியில் 2,441 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். ரோஹித் ஷர்மா, 97 போட்டிகளில் 89 இனிங்ஸ்களில் 32.45 என்ற சராசரியில் 2,434 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில், குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா, தீபக் சஹரிடம் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் றீஸா ஹென்ட்றிக்ஸை இழந்தபோதும், மற்றைய ஆரம்பத் துடுப்பாட்டவீரரான புதிய அணித்தலைவர் குயின்டன் டி கொக்கின் 52 (37), அடுத்து வந்த தெம்பா பவுமாவும் 49 (43) ஓட்டங்களுடன் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

பதிலுக்கு, 150 ஓட்டங்களை வெற்றியிலக்காக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்தியா, தமது ஆரம்பத்துடுப்பாட்டவீரர் ரோஹித் ஷர்மாவை ஆரம்பத்தில் அன்டிலி பெக்லுவாயோவிடம் இழந்தபோதும் மற்றைய ஆரம்பத் துடுப்பாட்டவீரர் ஷீகர் தவானின் 40 (31), விராத் கோலியின் ஆட்டமிழக்காத 72 (52) ஓட்டங்களின் துணையுடன் 19 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.

இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி மழையால் கைவிடப்பட்டிருந்த நிலையில், மூன்றாவது போட்டி பெங்களூருவில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏழு மணிக்கு இடம்பெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X