2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அரையிறுதிப் போட்டிகளில் மெக்ஸிக்கோ, போர்த்துக்கல்

Editorial   / 2017 ஜூன் 26 , மு.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஃபீபா கூட்டமைப்புகளின் கிண்ணத் தொடருக்கான (கொன்படரேஷன் கிண்ணம்) போட்டிகளில், நேற்று முன்தினம் இடம்பெற்ற இரண்டு போட்டிகளில், மெக்ஸிக்கோ, போர்த்துக்கல் அணிகள் வெற்றிபெற்றன. இதன்மூலம் இவ்வணிகள், அரையிறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுள்ளன.

ரஷ்யாவில் இடம்பெற்றுவரும் இப்போட்டிகளில், குழு “ஏ”க்கான போட்டிகளே, நேற்று முன்தினம் இடம்பெற்றன.

கஸனில் நடைபெற்ற போட்டியில், மெக்ஸிக்கோ அணியும் போட்டிகளை நடத்தும் ரஷ்ய அணியும் மோதின.

போட்டியின் 25ஆவது நிமிடத்தில், ரஷ்யாவின் அலெக்ஸான்டர் சாமெடோவ், கோலொன்றைப் பெற்றுக் கொடுத்து, தனது அணிக்கு முன்னிலையை வழங்கினார். எனினும், 5 நிமிடங்களில், மெக்ஸிக்கோவின் நெஸ்டர் அரௌஜோ, தனது அணிக்கான கோலைப் பெற்றுக் கொடுத்து, கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

முதற்பாதி, அந்த நிலைமையிலேயே முடிவடைய, இரண்டாவது பாதி ஆரம்பித்த பின்னர், போட்டியின் 52ஆவது நிமிடத்தில், மெக்ஸிக்கோ அணியின் ஹிர்விங் லொஸனோ, கோலொன்றைப் பெற்றுக் கொடுத்தார். இதன்மூலம் மெக்ஸிக்கோ அணி, 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. அதுவே, போட்டியின் முடிவாகவும் அமைந்தது.

சென். பீற்றர்ஸ்பேர்க்கில் நடைபெற்ற அடுத்த போட்டியில், போர்த்துக்கல் அணியும் நியூசிலாந்து அணியும் மோதின.

போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய போர்த்துக்கல் அணி சார்பான முதலாவது கோலை, கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுக் கொடுத்தார். 33ஆவது நிமிடத்தில், தனக்குக் கிடைத்த பெனால்ட்டி உதையை, கோலாக்கியமையின் மூலமே, அந்தக் கோலை, அவர் பெற்றுக் கொடுத்தார்.

அந்தக் கோல் பெறப்பட்டு 5 நிமிடங்களில், பேர்ணாட் சில்வாவால், கோலொன்று பெறப்பட்டது. இதனால் போர்த்துக்கல் அணி, 2-0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியின் பெரும்பாலான நேரங்களில், கோல்கள் பெறப்படாத போதிலும், 80ஆவது நிமிடத்தில், அன்ட்ரே சில்வாவும், 90ஆவது நிமிடத்தில் நானியும் கோல்களைப் பெற்று, 4-0 என்ற கோல் கணக்கில், போர்த்துக்கல் அணி வெற்றிபெறுவதை உறுதிப்படுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X