2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இன்டர் மிலனை வென்றது ஜுவென்டஸ்

Editorial   / 2019 ஒக்டோபர் 07 , பி.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், இன்டர் மிலனின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான ஜுவென்டஸ் வென்றது.

இப்போட்டியின் நான்காவது நிமிடத்திலேயே தமது முன்களவீரர் போலோ டிபாலா பெற்ற கோலின் மூலம் ஆரம்பத்திலேயே ஜுவென்டஸ் முன்னிலை பெற்றது.

எவ்வாறெனினும், இன்டர் மிலனின் மத்தியகளவீரர் நிக்கொலோ பரெல்லாவின் உதையானது ஜுவென்டஸின் பின்களவீரர் மத்தியாஸ் டி லிஜிட்டின் கையில் பட்டு பெனால்டி வழங்கப்பட்ட நிலையில் அதை இன்டர் மிலனின் முன்களவீரரான லொட்டரோ மார்ட்டின்ஸ் கோலாக்க கோலெண்ணிக்கையை இன்டர் மிலன் சமநிலைப்படுத்தியது.

இவ்வாறாக 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முதற்பாதி முடிவடைந்திருந்த நிலையில், இரண்டாவது பாதியில் மாற்றுவீரராகக் களமிறங்கிய இன்டர் மிலனின் மத்தியகளவீரரான மத்தியாஸ் வெசினோ, கோல் கம்பத்துக்கு அருகிலிருந்து கோல் கம்பத்தை நோக்கி உதைந்த உதையை ஜுவென்டஸின் கோல் காப்பாளர் வொச்சிவ் ஸ்டான்ஸே தடுத்ததோடு, ஜுவென்டஸின் முன்களவீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உதையை இன்டர் மிலனின் கோல் காப்பாளர் சமிர் ஹன்டனோவிச் தடுத்திருந்தார்.

இந்நிலையில், போட்டியின் 80ஆவது நிமிடத்தில் மாற்றுவீரராகக் களமிறங்கிய ஜுவென்டஸின் மத்தியகளவீரரான றொட்றிகோ பென்டாக்கூரிடமிருந்து பெற்ற பந்தை, மாற்றுவீரராகக் களமிறங்கிய ஜுவென்டஸின் முன்களவீரரான கொன்ஸலோ ஹியூகைன் கோலாக்கிய நிலையில் இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் வென்றது.

இதேவேளை, டொரினோவின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நாப்போலி முடித்துக் கொண்டிருந்தது.

இந்நிலையில், தமது மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற கல்லேகரியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் றோமா முடித்துக் கொண்டிருந்தது. கல்லேகரி சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜோவா பெட்ரோ பெற்றிருந்தார். றோமாக்கு ஓவ்ண் கோல் முறையில் கோல் கிடைக்கப்பெற்றிருந்தது.

இதேவேளை, பொலொக்னாவின் மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் லேஸியோ முடித்துக் கொண்டிருந்தது. லேஸியோ சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் சிரோ இம்மொபைல் பெற்றிருந்தார். பொலொக்னா சார்பாக, லடிஸ்லாவ் கிரேஜ்ஜி, றொட்றிகோ பலாசியோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர்.

இப்போட்டிகளின் முடிவில் சீரி ஏ புள்ளிகள் பட்டியல் பின்வருமாறு,

நிலை     அணி                  போட்டிகள்      கோல் வித்தியாசம்    புள்ளிகள்

  1. ஜுவென்டஸ்         7                           7                                      19
  2. இன்டர் மிலன்       7                           10                                    18
  3. அத்லாண்டா          7                           8                                      16
  4. நாப்போலி               7                          5                                       13
  5. றோமா                      7                          2                                       12
  6. லேஸியோ                7                          7                                       11

13. ஏ.சி மிலன்                 7                        -3                                       9


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .