2020 மே 29, வெள்ளிக்கிழமை

இலங்கை எதிர் பாகிஸ்தான்: டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பிக்கிறது

Editorial   / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரானது, ராவல்பின்டியில் நாளை காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் தொடங்குகின்றது.

பாகிஸ்தானுக்கு 2009ஆம் ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கையணி தாக்குதலுக்குள்ளான பின்னர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள முதலாவது டெஸ்ட் தொடர் என்பதால், பாகிஸ்தானில் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு இத்தொடர் முக்கியத்துவமிக்கதாய் அமைகிறது.

இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்குள் இத்தொடர் அடங்குகின்ற நிலையில் இத்தொடர் முக்கியத்துவம் பெறுகிறது.

இலங்கையணியைப் பொறுத்தவரையில், அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, முன்னாள் அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், குசல் மென்டிஸ், தனஞ்சய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, ஒஷாட பெர்ணான்டோ என பலமானதாகவே காணப்படுகிறது.

மறுபக்கமாக பந்துவீச்சைப் பொறுத்தவரையில், லசித் எம்புல்தெனிய, டில்ருவான் பெரேரா என சிறப்பானதாக சுழற்பந்துவீச்சு காணப்படுகின்றபோதும் சுரங்க லக்மாலை டெங்கு காரணமாக இலங்கை இழந்தமை அவ்வணிக்கு பின்னடைவாகக் காணப்படுகிறது. அந்தவகையில், சுரங்க லக்மாலின் வகிபாகத்தை லஹிரு குமார, விஷ்வ பெர்ணான்டோ உள்ளிட்டோர் நிறைவேற்றவேண்டியவர்களாகக் காணப்படுகின்றனர்.

இதேவேளை, பாகிஸ்தானைப் பொறுத்தவரை பந்துவீச்சு, துடுப்பாட்டம் என இரண்டுமே பிரச்சினைக்குரியதாகவே காணப்படுகிறது. துடுப்பாட்டத்தைப் பொறுத்தவரையில், அணித்தலைவர் அஸார் அலியிலிருந்து அனைவரும் முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டியவர்களாக உள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடரில் மோசமாகச் செயற்பட்ட இஃப்திஹார் அஹ்மட்டை குழாமில் ஃபவட் அலம் பிரதியீடு செய்துள்ள நிலையில், அணியிலும் அவரை ஃபவட் அலம் பிரதியிட்டு, பாபர் அஸாம், அசாட் ஷஃபிக், மொஹமட் றிஸ்வான், ஷண் மசூட் போன்றோருடன் துடுப்பாட்டத்துக்கு மேலும் வலுசேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடரில் விக்கெட்டுகளைக் கைப்பற்ற பாகிஸ்தான் தடுமாறிய நிலையில், இத்தொடரில் மிகவும் அழுத்தக்குள்ளானவர்களாக பந்துவீச்சாளர்கள் காணப்படுகின்றனர். அத்தொடரில் துடுப்பாட்டத்தில் யசீர் ஷா ஓட்டங்களைப் பெற்றிருந்தபோதும் அவரது பந்துவீச்சு கேள்விக்குறியாகியிருந்தது. ஆக, அவர் தனது இடத்தைத் தக்க வைப்பதற்கு சிறப்பான பந்துவீச்சு பெறுபேற்றை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்திலுள்ளார்.

வேகப்பந்துவீச்சுக் குழாமைப் பொறுத்தவரையில், ஷகீன் ஷா அஃப்ரிடி, நசீம் ஷாவுடன், டெஸ்ட்களில் இதுவரையில் விளையாடியிருக்காத உஸ்மான் ஷின்வாரி விளையாடுவதற்குரிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X