2020 மே 29, வெள்ளிக்கிழமை

ஒலிம்பிக்கில் ரஷ்யாவுக்குத் தடை: ரஷ்யா மேன்முறையீடு செய்யுமென்கிறார் புட்டின்

Editorial   / 2019 டிசெம்பர் 10 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த கோடை, குளிர்கால ஒலிம்பிக், 2022ஆம் ஆண்டு கால்பந்தாட்ட உலகக் கிண்ணம் உள்ளிட்டவற்றிலிருந்து ரஷ்யாவைத் தடை செய்யும் உலக ஊக்கமருந்துக்கெதிரான முகவரகத்தின் தீர்மானத்துக்கெதிராக மேன்முறையீடு செய்யக்கூடிய காரணங்களை ரஷ்யா கொண்டிருக்கிறது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நேற்று தெரிவித்துள்ளார்.

ஊக்கமருந்துச் சோதனைகளில் மாற்றங்களை ஏற்படுத்தியதற்காக அடுத்த கோடை, குளிர்கால ஒலிம்பிக், 2022ஆம் ஆண்டு கால்பந்தாட்ட உலகக் கிண்ணம் உள்ளிட்டவற்றிலிருந்து முன்னதாக நேற்று  நான்கு ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, பிரான்ஸ் தலைநகர் பரிஸில் உக்ரேனிய ஜனாதிபதி வொலடீமர் ஸிலென்ஸ்கியைச் சந்தித்த பின்னர் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி புட்டின், விளையாட்டின் மீதான ஆர்வத்தால் இல்லாமல் அரசியலால் எடுக்கப்பட்ட முடிவை ரஷ்யா ஆராயும் எனக் கூறியுள்ளார்.

போலி ஆதாரங்களை ரஷ்யா பதிந்திருந்ததாகவும், ஊக்கமருந்து மோசடியாளர்களை அடையாளங் காணுவதற்கு உதவக்கூடிய ஆய்வுகூடத் தரவிலிருந்த நேர்மறையான ஊக்கமருந்துச் சோதனைகளுடன் தொடர்புபட்ட ஆவணங்களை அழித்தது என முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்தே உலக ஊக்கமருந்துக்கெதிரான நிறுவகம் மேற்குறித்த தீர்மானத்துக்கு வந்திருந்தது.

எவ்வாறெனினும், ரஷ்யாவின் தேசிய ஒலிம்பிக் செயற்குழுவுக்கெதிராக உலக ஊக்கமருந்துக்கெதிரான நிறுவகத்தின் முறைப்பாடு எதுவும் இல்லாத நிலையில், தேசியக் கொடியின் கீழ் ரஷ்யா போட்டியிட வேண்டுமென்பதே ஒலிம்பிக் விதி எனவும் அந்தவகையில் உலக ஊக்கமருந்துக்கெதிரான நிறுவகமானது ஒலிம்பிக் விதிகளை மீறியுள்ளதெனவும், மேன்முறையீட்டை மேற்கொள்ளக்கூடிய அனைத்துக் காரணங்களையும் தாங்கள் கொண்டுள்ளதாக ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X