2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

சிலியை வீழ்த்தி முடிசூடியது ஜேர்மனி

Editorial   / 2017 ஜூலை 04 , மு.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில் இடம்பெற்றுவந்த, சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் கூட்டமைப்புகளின் (கொன்பெடரேஷன்) கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில், சிலி அணியை வீழ்த்திய ஜேர்மனி, சம்பியன்களாக முடிசூடிக் கொண்டது.

நேற்று முன்தினம் இடம்பெற்ற இறுதிப் போட்டியில், உலகச் சம்பியன்களான ஜேர்மனியும் கோப்பா அமெரிக்கத் தொடரின் சம்பியன்களான சிலியும் மோதியிருந்தமை, பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. எனினும், பலமான சிலி அணியை வீழ்த்திய ஜேர்மனி, தமது முதலாவது கூட்டமைப்புகளின் கிண்ணச் சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிக் கொண்டது.

போட்டியில் சிலி அணி, தமது வழக்கமான, அதி வேகமான விளையாட்டை வெளிப்படுத்தியது. குறிப்பாக அர்துரோ விடாலால், சிறப்பான பந்துப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், கோல்களைப் பெறுவதற்கு, ஏனைய வீரர்கள் தவறினர்.

ஆரம்பத்திலிருந்தே, இரு அணிகளும் விட்டுக் கொடுக்காமல் விளையாடியிருந்தன. அலெக்ஸிஸ் சான்செஸ், தனக்குக் கிடைத்த பந்தை, கோல் கம்பத்துக்கு வெளியே அடுத்திருந்தார். ஜேர்மனி அணி, அதற்குப் பின்னர் உடனடியாக பதிலடி வழங்குவது போலச் செயற்பட்டது.

சிலி அணியின் மத்திய கள வீரரான மர்செலோ டியஸிடம் பந்தைப் பறித்த டிமோ வேர்னெர், அந்தப் பந்தை லார்ஸ் ஸ்டின்டெலிடம் வழங்க, போட்டியின் 20ஆவது நிமிடத்தில், அதை அவர் கோலாக்கினார்.

இரண்டாவது பாதியில் ஜேர்மனி அணி, ஓரளவு தடுப்பாட்டத்தையே வெளிப்படுத்திய நிலையில், சிலி அணியால், அதைத் தாண்டி, கோல்களைப் பெற்றுக் கொள்ள முடிந்திருக்கவில்லை.

இறுதியில், 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற ஜேர்மனி அணி, சம்பியன் பட்டத்தைத் தட்டிக் கொண்டது.

இதில் குறிப்பாக, அதிகளவு வாய்ப்புகள் தவறவிடப்பட்ட போட்டியாக இது அமைந்தது. அதேபோல், காணொளி மூலமான முடிவு மீளாய்வு, இரண்டு முறை பயன்படுத்தப்பட்டது.

ஜேர்மனி அணியின் 21 வயதுக்குட்பட்ட அணி, ஐரோப்பிய 21 வயதுக்குட்பட்டோருக்கான சம்பியன்ஷிப் தொடரில், கடந்த வெள்ளிக்கிழமை சம்பியன் பட்டம் வென்றிருந்தது. தற்போது, இந்தத் தொடரையும், ஜேர்மனி அணி கைப்பற்றியுள்ளது. எனவே, அடுத்த உலகக் கிண்ணத் தொடரில், ஜேர்மனி அணியின் எதிர்காலம், பிரகாசமாக இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, றியோவில் வைத்து, 3 ஆண்டுகளுக்கு முன்னர் சம்பியன் பட்டத்தை வென்ற ஜெர்மனி அணியிலிருந்து, பல வீரர்கள் தற்போது இல்லாத நிலையிலேயே, இந்தச் சம்பியன் பட்டத்தை வென்றமை, முக்கியமானதாக அமைந்தது.

இதேவேளை, மூன்றாவது இடத்துக்கான போட்டியில், போர்த்துக்கல் அணியும் மெக்ஸிக்கோ அணியும் மோதின. இதில், 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற போர்த்துக்கல் அணி, மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டது. வழக்கமான நேரத்தில், இரு அணிகளும் தலா ஒரு கோலைப் பெற்றிருந்த நிலையில், மேலதிக நேரத்தில் கிடைக்கப்பெற்ற பெனால்டி மூலமாக, அட்ரியன் சில்வா பெற்ற கோலே, போர்த்துக்கல் அணியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X