Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 04 , மு.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகமான செல்சி, தனது முன்னாள் வீரரான கரி ஜோன்சனிடம் மன்னிப்புக் கோரியுள்ளது. சிறு வயது வீரராக இருந்த போது, கழகத்தில் ஜோன்சன் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்களுக்காகவே, இந்த மன்னிப்புக் கோரப்பட்டுள்ளது.
தற்போது 57 வயதாகும் ஜோன்சன், 1970களில், அப்போது செல்சி அணியின் பிரதம தேடலாளாக இருந்த எடி ஹேரத் என்பவரால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாகத் தெரிவித்திருந்தார். இதற்காக, 2015ஆம் ஆண்டில் அவர், செல்சி கழகத்தால் 50,000 ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்களை இழப்பீடாக வழங்கியிருந்தது. இந்த இழப்பீடு வழங்கப்படும் போது, அவ்விடயத்தை இரகசியமாகப் பேண வேண்டுமென, கழகத்தால் வலியுறுத்தப்பட்டிருந்தது. அதுவும், இப்போது அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள செல்சி, "எங்களது பராமரிப்பில் உள்ள, எமது அரங்கப் பகுதியில் இருக்கும் சிறுவர்களினதும் இளைஞர்களினதும் பாதுகாப்பையும் நலனையும் உறுதிப்படுத்துவது தொடர்பில் நாம் அர்ப்பணிப்புடன் காணப்படுகிறோம். அவர்களது நலன் பேணல் என்பது, எமக்கு மிகவும் முக்கியமானது" எனத் தெரிவித்துள்ளது.
பாலியல் குற்றச்சாட்டுத் தொடர்பில் மௌனம் காக்க வேண்டுமென, இழப்பீட்டுக்கான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டமை, பொருத்தமற்றது எனவும் அக்கழகம் ஏற்றுக் கொண்டுள்ளது. "1970களிலும் 1980களிலும் கால்பந்தாட்டக் கழகங்களிலும் நிலவிய பரந்தளவிலான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நாம் தற்போது அறிந்துள்ளவை பற்றிப் பார்க்கும் போது, இழப்பீட்டு ஒப்பந்தத்தின் அந்தச் சரத்து, புரிந்துகொள்ளப்படக்கூடியது என்ற போதிலும், பொருத்தமற்றது என்பதைப் புரிந்து கொள்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்கள் மீது இங்கிலாந்தின் கால்பந்தாட்டக் கழகங்களில் மேற்கொள்ளப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அண்மைக்காலத்தில் ஏற்பட்டுள்ள கவனத்தைத் தொடர்ந்து, இதுவரை சுமார் 350 பேர், தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் முன்வந்து கருத்துத் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கும் பிரித்தானியப் பொலிஸார், அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென அஞ்சுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
1 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago