2021 மே 08, சனிக்கிழமை

'எத்தனை பேர் சட்டத்தை இயற்றுகின்ற தகுதியோடு இருக்கிறார்கள்'

Niroshini   / 2015 நவம்பர் 21 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

நாடாளுமன்றத்துக்குச் சென்று மக்களுக்குத் தேவையான சட்டங்களை இயற்றுவது நாடாளுமன்ற உறுப்பினர்களது முக்கியமான கடமையாகும். எங்களுடைய நாடாளுமன்றத்தில் எத்தனை பேர் சட்டத்தை இயற்றுகின்ற தகுதியோடு இருக்கிறார்கள் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார்.
 
மட்டக்களப்பு, கரடியனாறு பிரதேசத்தில் பண்ணையார்களுக்கு மானிய விலையில் பசு மற்றும் எருமை மாடுகள் வழங்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

எமது உரிமைகளை பெற்றெடுக்க வேண்டும் என்ற ரீதியில் கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வந்தது. தற்போது நாங்களும் சேர்ந்து ஆட்சியை ஏற்படுத்தியுள்ளோம். இந்த ஆட்சியை கவிழ்ப்பதற்கு பல சதிகள் நடைபெறுகின்றன. எங்களுடைய செயற்பாடுகள் கவிழ்ப்பவர்களுக்கு ஆதரவாக இருக்குமானால் அவர்கள் ஆட்சியை கவிழ்த்துவிட்டால் எமது பிரச்சினைகளை யாரிடம் கூறப்போகிறோம்.

60க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக நாங்கள் அனுபவித்த துன்பங்களை அடுத்த சந்ததியினருக்கு கொண்டு செல்லப் போகின்றோமா? அல்லது தற்போது இருக்கின்ற நிலைமையை மிகவும் அவதானத்துடனும் சாதுரியத்துடனும் எமது பிரச்சினைகளை எடுத்துச் சொல்லி தீர்வுகாண வேண்டும்.

எமது பிரச்சினைகள் பல இடங்களிலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. எங்களுடைய சமூகத்துக்கு நாட்டுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுக்கக் கூடிய வகையில் எமது செயற்பாடுகள் அமைய வேண்டும்.

எங்களுடைய உரிமைகள் பெரும்பான்மை இன அரசியல்வாதிகளின் கைகளில் அகப்பட்டிருக்கின்றன. அதனை நாங்கள் நிதானமாக செயற்பட்டு பெற்றுக்கொள்ள வேணடும். எங்களுடைய பிரச்சினைகளை உணரும் வகையில் நிலைமைகளை ஏற்படுத்த வேண்டும். மத்திய அரசாங்கத்துடன் சரியான முறையில் அணுகி எமது உரிமைகளை பெற்றுக்கொள்ளவேண்டும்.

அரசியல்வாதிகள் குப்பை வேலைகளை செய்யக்கூடாது. மக்களுக்கு என்ன செய்தி சொல்லப்படவேண்டும் என்பதை ஆயத்தமாக்கிக்கொண்டு செல்ல வேண்டும். வேலிக்கு மறுபுறத்தில் நின்று சண்டை பிடிக்கின்ற சில்லறைத்தனமான அரசியல் செய்யக்கூடாது. ஒர் அரசியல்வாதி அவ்வாறு செயற்படுகிறார் என்றால் மற்றவர்களும் அவ்வாறு செயற்பட வேண்டும் என மக்களும் எதிர்பார்க்க கூடாது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X