2020 நவம்பர் 25, புதன்கிழமை

‘சிங்கள சமூகம் குறித்து கவனம் செலுத்துவோம்’

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 22 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா

‘மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபான்மைச் சமூகமாக வாழ்கின்ற சிங்களச் சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் நாம் கவனம் செலுத்துவோம்’ என நீதி அமைச்சரும் புத்தசாசன அமைச்சருமான விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். 

மட்டக்களப்புக்கு நேற்று (21) விஜயம் செய்த அமைச்சர், மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமண ரத்ன தேரர் மற்றும் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.  

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, “இங்குள்ள சிங்கள சமூகத்தின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பில் நாம் கலந்துரையாடியுள்ளோம். அவர்களின் பிரச்சினைகள், கோரிக்கைகள் தொடர்பில் எனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.  

“இந்நிலையில், அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.  

“இம்மாவட்டத்திலுள்ள சிங்கள மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இங்கில்லை. அந்த வகையில், அவர்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதற்காக, மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமண ரத்ன தேரர், குரல் கொடுத்து வருகின்றார். 

“யுத்தத்துக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில், 28,000 சிங்களக் குடும்பங்கள் வாழ்ந்துவந்தன. ஆனால், தற்போது அக்குடும்பங்கள் இல்லை என்பதுடன், வாக்களிக்கும் உரிமையும் அவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது இல்லை. 

“சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்று கூறுகின்றனர். ஆனால், வடக்கு- கிழக்கு மாகாணங்களில், பௌத்த மக்கள் சிறுபான்மையினர் ஆவர். அவர்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும். 

“நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது, ‘பொருட்களுக்கு விலை குறைப்போம்’ என்று கூறி ஆட்சிக்கு வரவில்லை. ‘அனைத்துச் சமூகங்களையும் இன, மத வேறுபாடுகளின்றி வாழ வைப்போம்’ என்று கூறியே ஆட்சிக்கு வந்தது. அதனை, இந்த அரசாங்கம் நிறைவேற்றி வருகின்றது. 

“அனைத்துச் சமூகங்களையும் இன, மத பேதமின்றி ஒரே நோக்குடன், இந்த நல்லாட்சி அரசாங்கம் பார்க்கின்றது” எனவும் அவர் கூறினார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .