Niroshini / 2017 மே 20 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
“பெரும்பான்மையினத்திடம் இருந்து உரிமையை பெறுவதற்காக தமிழ் மக்கள் போராடினார்கள். எதிர்காலத்தில் தமிழ் மக்களிடம் இருந்து உரிமையினைப் பெறுவதற்காக முஸ்லிம் மக்கள் போராடக்கூடாது என்பதற்காக இணைந்த வட-கிழக்கில் குறிப்பிட்ட அதிகாரங்களுடன் தனி அலகு ஒன்று முஸ்லிம்களுக்கு வழங்கப்படவேண்டும்” என, கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.
மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேசத்தின் ஆரையம்பதியில் அமைக்கப்பட்ட பொதுநூலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“வட-கிழக்கு மக்கள் கல்வி அறிவில் முன்னிலையில் இருந்த காரணத்தினால் அந்த இனத்தை அழிக்கவேண்டும்,அவர்களது பூரணத்துவத்தை இல்லாமல்செய்ய வேண்டும் என்று 1981ஆம் ஆண்டு ஜுன் மாதம் 01ஆம் திகதி கிழக்காசியாவின் மாபெரும் வாசிகசாலையாக இருந்த யாழ். நூலகம் எரிக்கப்பட்டது. அது எரிக்கப்பட்டு இன்று 36 வருடங்களை கடந்துள்ளது.
அந்த நூலக எரிப்பினை தொடர்ந்து தமிழ் மக்கள் எந்தளவுக்கு நசுக்கப்பட்டார்கள், அதனைத்தொடர்ந்து, 1983ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தை தொடர்ந்து வடகிழக்கில் போராட்டம் என்பது விரிவடைந்ததை நாங்கள் அறிவோம்.
நாங்கள் எந்தளவுக்கு துன்புறுத்தப்பட்டோம், எந்தளவுக்கு அடிமைகளாக்கப்பட்டோம், நாங்கள் ஏன் போராடினோம் என்பதற்கு பெரிய உதாரணமாக யாழ். நூலகம் இருந்துவருகின்றது.
அதனைத்தொடர்ந்து, 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி எமது விடுதலைப்போராட்டம் ஒடுக்கப்பட்டு நசுக்கப்பட்டு இலட்சக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள். எட்டு வருடங்களை கடந்துள்ள நிலையிலும் அந்த போராட்டத்திற்கான தீர்வு இதுவரை கிடைக்கவில்லை.
இந்த நிலையில், எங்களால் உருவாக்கப்பட்ட இந்த நல்லாட்சி கூட ஒரு தீர்வுத் திட்டத்தினை வழங்க வேண்டும் என்று செயற்படவில்லை. வட-கிழக்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு நூற்றுக்கணக்கான இடங்களில் அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கும்போது அதனை யுத்த வெற்றியாக இன்றைய அரசாங்கம் கொண்டாடுகின்றது. அதேபோன்று இந்த போராட்டத்தினை நசுக்கி தமிழர்களை கொத்துக்கொத்தாக கொன்றொழித்த மஹிந்தவும் யுத்த வெற்றிக்கொண்டாட்டத்தை நடாத்துகின்றார்.
இந்த நாட்டில் ஓர் இனம் துன்பப்பட்டு, கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கும்போது இன்னுமொரு இனம் வெற்றிக்கொண்டாட்டத்தை செய்துகொண்டிருக்கின்றது என்றால் இந்த நாடு எங்குள்ளது என்பதை நாங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
எமக்கு நீதி வேண்டும், நியாயம் வேண்டுமென்று ஒரு பக்கத்தில் போராடிக்கொண்டிருக்கும்போது மாகாண சபைகளுக்கு அதிகாரம் வேண்டும் என்றும் போராடிக்கொண்டிருக்கின்றோம். மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கும் முதலமைச்சர்களில் முதல் இடத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் இருக்கின்றார்.
எமக்கு தரப்படும் அதிகாரத்தின் மூலம் எமது மாகாணத்தையும் பிரதேசத்தினையும் ஒற்றுமையுடன் அபிவிருத்தி செய்ய வேண்டும். இதனை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த ஆட்சிக் காலத்தில் ஒட்டிக்கொண்டிருந்த காவியுடை தரித்த காவாலி கூட்டத்தினர் இந்த நல்லாட்சியிலும் தலையெடுக்க ஆரம்பித்துள்ளனர்” என்றார்.
“கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் வழிபடுவதற்கு மக்களே இல்லாத பகுதிகளில் புத்தர் சிலைகள் முளைக்கின்றன. தமிழ் பேசும் மக்கள் ஒரு புதிய ஆட்சியை கொண்டுவந்ததைபோன்று எமது பிரதேசத்தினை பாதுகாக்க வேண்டுமானால் ஒற்றுமையாக நின்று ஜனநாயக ரீதியாக போராட வேண்டும்.
எமக்கான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். எமக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும். எங்களது பிரதேசத்தினை நாங்கள் பாதுகாக்கும் நிலைப்பாடு ஏற்பட வேண்டும். இலட்சக்கணக்கான உயிர்களையும் கோடிக்கணக்கான சொத்துகளையும் பறிகொடுத்தது எமது நிலங்களையும் மண்ணையும் பாதுகாப்பதற்காகவே.
பெரும்பான்மையினத்திடம் இருந்து உரிமையை பெறுவதற்காக தமிழ் மக்கள் போராடினார்கள். எதிர்காலத்தில் தமிழ் மக்களிடம் இருந்து உரிமையினைப் பெறுவதற்காக முஸ்லிம் மக்கள் போராடக்கூடாது என்பதற்காக இணைந்த வட-கிழக்கில் குறிப்பிட்ட அதிகாரங்களுடன் தனி அலகு ஒன்று முஸ்லிம்களுக்கு வழங்கப்படவேண்டும் என்பது எங்களது கோரிக்கை. அந்தவகையில், இணைந்த வட-கிழக்குக்காக போராடவேண்டும். அதற்காக ஒன்றுபட்டு நாங்கள் எமது பிரதேசத்தினை அபிவிருத்தி செய்யவேணடும்” எனவும் தெரிவித்தார்.
16 minute ago
45 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
45 minute ago
1 hours ago
1 hours ago