2021 மார்ச் 08, திங்கட்கிழமை

'தற்போதைய ஆட்சியில் தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்காவிடின், எதிர்காலத்திலும் கிடைக்காது'

Suganthini Ratnam   / 2016 மே 19 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்காவிடின், எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் எந்த அரசாங்கத்திலும் இந்தத் தீர்வு கிடைக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரிவித்தார்.

தமிழ் மக்களின் விடிவுக்காக தற்போதைய அரசாங்கம் சிறந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்தாலும், பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த குரோத எண்ணம் கொண்ட அரசியல்வாதிகள் சிலர், சமாதானத்தை விரும்பும் பெரும்பான்மை இனத்தவர்களின் மனங்களை மாற்றும் செயற்பாடுகளில் தற்போதும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் இந்தச் செயற்பாட்டை நிறுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த தமிழ் உறவுகளுக்காக ஆத்ம சாந்திப் பூஜை மட்டக்களப்பு, பேத்தாழை வீரையடி விநாயகர் கோவிலில் புதன்கிழமை (17) மாலை நடைபெற்றது. இதன் பின்னர், உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் உயிரிழந்த நாளை நாம் நினைவுகூருகின்றோம். எமது உறவுகளின் தியாகங்கள் நிஜமாகுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள், தற்போதைய நல்லாட்சி என்கின்ற அரசாங்கத்தின் ஊடாக நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இவ்வாறான தருணத்தில் மேலும் சில புல்லுருவிகள், நிரந்தர அரசியல் தீர்வைக் குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்' என்றார்.

'இந்த நாட்டில் அனைவருக்கும் சமமான உரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காக எமது தலைமைகள், தற்போதைய அரசாங்கத்துடன் பல பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சமாதான இலங்கையைக் கட்டியெழுப்ப வேண்டும். 2016ஆம் ஆண்டில் எமக்கு சிறந்த தீர்வு கிடைக்கும் என்று எமது தலைவர் தெரிவித்துள்ளார். இந்தத் தீர்வு கிடைக்கத் தவறும் பட்சத்தில், மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்பும். எனவே, தற்போதைய அரசாங்கமானது எத்தகைய தியாகங்களைச் செய்தாவது இந்த ஆண்டுக்குள் தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வை பெற்றுக்கொடுக்க வழி செய்ய வேண்டும்' எனவும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .