2021 மே 12, புதன்கிழமை

தொல்பொருள்கள் கண்டுபிடிப்பு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 27 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு வந்தாறுமூலை, பாற்சேத்துகுடாப் பகுதியில் நாகர் ஆட்சி இருந்தமைக்கான தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.                    

வரலாற்றுத்துறை பேராசிரியரும் யாழ்.பல்கலைக்கழக வேந்தருமான சி.பத்மநாதன் உட்பட தொல்லியல் ஆய்வுக்குழு உறுப்பினரும் ஆசிரியருமான செ.பத்மநாதன் ஆகியோர் இப்பிரதேசத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் 03 நாட்களாக  ஆய்வு மேற்கொண்டனர்.

இதன்போது தமிழ்ப்பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட மட்கல ஓடுகள், கறுப்பு மற்றும் சிவப்பு மட்கல ஓடுகள், அக்கால மக்களின் வழிபாட்டுக்குரிய தாயத்துக் கருங்கற்கள், பெருங்கற்கால பண்பாட்டுச் சான்றான ஈமத்தாழி தூண்டம், தமிழ் அரசிளங்குமாரிகள் அணிந்த சிவப்பு முத்துமணியொன்று, கைவளையல் துண்டுகள் வெளிநாட்டில் உற்பத்தியான ரூலட் மட்கல ஓடுகள், நன்கு சுடப்பட்ட பெரிய செங்கற்கள் என்பன கண்டெடுக்கப்பட்டன.

இங்கு கண்டெடுக்கப்பட்ட சான்றுகளில் மணிநாகன்பள்ளி வேள்நாகன் எனும் தமிழ்ப்பிராமி எழுத்துகள் காணப்பட்டன. அத்துடன், வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் கோவிலில் கருங்கல்லினால் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலையை ஆய்வு செய்தபோது, சிலையில் மணிநாகன்பள்ளி எனும் தமிழ்ப்பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன.

ஆதியான இலங்கையில் பூர்வீக இனக்குழுக்களில் ஒன்றாக காணப்பட்ட தமிழர் மூதாதயரான நாக வம்சத்தினர் இந்துமதத்தில் தங்களை இணைத்துக்கொண்ட காலப்பகுதியில் விநாயகர் வழிபாட்டை கடைப்பிடித்தனர் என்பதுக்கு இந்த விநாயகர் சிலை சான்றாகும்.

ஆதியில் வந்தாறுமூலையை ஆட்சி செய்த குறுநில அரசுகளான வேளிர்குல நாக வம்சத்தினர், நாக வழிபாட்டையும் விநாயகர் வழிபாட்டையும் ஒருங்கிணைத்து கோவில் அமைத்து வழிபட்டிருந்தனர். வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் கோவிலானது ஆதியில் வந்தாறுமூலையை ஆட்சி செய்த குறுநில அரசுகளான வேளிர்குல நாக வம்சத்தினரால் அமைக்கப்பட்டுள்ளது என்பது சிறப்பம்சமாகும்.

இங்கு கிடைத்த சான்றுகளை தமிழ்ப்பிராமி வரிவடிவ வளர்ச்சியின் அடிப்படையிலும்; பெருங்கற்கால பண்பாட்டுச் சான்றின் அடிப்படையிலும் கி;.மு. 2ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவையாகும். இலங்கைத் தமிழரின் ஆதிகால வரலாற்று மூலாதாரமாகவும் நாகரின் பண்பாட்டுச் சின்னமாகவும் பெருங்கற்கால பண்பாட்டு நாகரின் கலையாற்றலையும் காட்டுகின்றன. பாற்சேத்துகுடா நாகரின் வழிபாட்டுத் தலமாகவும் அரண்மனையாகவும் ஆதியில் காணப்பட்டதாக பேராசிரியர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .