2021 ஜனவரி 16, சனிக்கிழமை

'பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை'

Suganthini Ratnam   / 2016 ஜூலை 08 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம்.நூர்தீன்

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோது இந்த நாட்டில் உள்ள பிரச்சினைகள் விரைவாக தீரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த பிரச்சினைக்கும்; முழுமையாக தீர்வு காணப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 59ஆவது தேசிய பேராளர் மாநாடு இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த சங்கத்தின் மாநாட்டில் கல்வித்துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினை, நாட்டில் சமகால பிரச்சினைகள் மற்றும் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டன.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில்; முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அதிபருமான பிரின்ஸ் காசிநாதர் பிரதம அதிதியாகவும் மற்றும் இலங்கையில் பல பாகங்களிலும் கடமையாற்றும் 150க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆசிரியர் சங்க தலைவர், 'தேசிய ரீதியாக கூடிய நிதிகளை ஒதுக்கீடு செய்து கல்வி அபிவிருத்திகளை மேற்கொள்ளவேண்டும் என்பது தொடர்பான தொடர் அழுத்தங்களை எமது சங்கம் மேற்கொண்டுவருகின்றது. நாங்கள் பெரிய செயற்பாடுகளில் ஈடுபடுவதை விட, அதிகளவான சிறிய சிறிய செயற்பாடுகளை மேற்கொண்டு அதன் மூலம் இலக்கினை அடையமுடியும்.

1970,  1980களில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் தொடக்கம் உறுதியான நிலைப்பாட்டினை இலங்கை ஆசிரியர்கள் சங்கமே கடைப்பிடித்துவருகின்றது. இலங்கையில் நீண்டகாலமாக இன, மத பேதங்களுக்கு அப்பால் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் அவர்களின் தேவைகளையும் இனங்கண்டு தீர்த்துவருகின்றது.

நாட்டில் காணப்படும் பல பிரச்சினைகளை அரசியல்வாதிகள் தங்களின் அரசியலுக்கு பயன்படுத்தும் நிலையே இருந்துவருகின்றது. அவ்வாறான செயற்பாடுகளை இனங்கண்டு மக்கள் முன்வெளிப்படுத்தவேண்டும்.
கடந்த 30 வருடகால யுத்த சூழ்நிலையின்போது பிழையான வழிகளில் எமது சங்கத்தின் செயற்பாடுகளை சிலர் கொண்டுசெல்ல முயற்சித்தபோதிலும், அவற்றினை முறியடித்து நேர்மையான முறையில் வழிநடத்திச்செல்லப்பட்டது. அரசியல்வாதிகளின் முகத்திரைகளை கிழித்தெறிந்து நேர்மையான முறையில் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம்.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோது இந்த நாட்டில் உள்ள பிரச்சினைகள் விரைவாக தீரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த பிரச்சினையும் முழுமையாக தீர்க்கப்படவில்லை. இந்த நாட்டில் உள்ள சில அரசியல்வாதிகள் இனவாதத்தினையும் மதவாதத்தினையும் கொண்டு அரசியல்செய்யும் நிலையேற்பட்டதன் காரணமாக இந்த நிலையுள்ளது. இந்த வேளையில் கல்விமான்கள்,  புத்திஜீவிகள் பொதுமக்களுக்கு ஆற்றவேண்டிய பணியை சிறந்தமுறையில் முன்னெடுக்கவேண்டும்.

இந்த நாட்டில் புதிய ஆட்சி ஏற்படுத்தப்பட்டபோது கல்வி அபிவிருத்தியில் பாரிய மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரிதாக எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை. அதற்கான காரணங்களை இனங்கண்டு பிரச்சினைகளை தீர்க்க தேவையான அழுத்தங்களை நாங்கள் வழங்கவேண்டும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .