2020 நவம்பர் 25, புதன்கிழமை

'மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இரகசியமானது அல்ல'

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 26 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா

மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இரகசியமான கூட்டம் அல்ல என்பதுடன்,  மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்துக்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் எனக் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

வருட இறுதிக்கான மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மாவட்டச்  செயலகத்தில் நேற்று (26) நடைபெற்றது.
கூட்டம் ஆரம்பமாகிய வேளையில் கூட்ட மண்டபத்துக்குள் முதலில் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனினும், பின்னர் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், புகைப்படங்களை எடுத்துக்கொண்டு வெளியில் செல்லுமாறு ஊடகவியலாளர்களிடம் கேட்கப்பட்டதுடன், கூட்டம் முடிந்த பின்னர் கூட்டம் தொடர்பான விவரங்கள்  ஊடகவியலாளர்களுக்குத் தெரியப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவிக்கையில், 'கடந்த முறை நடைபெற்ற கூட்டம் தொடர்பான விவரங்களை 03  அதிகாரிகள் தங்களின் அலைபேசிகளிலிருந்து நேரடியாக பேஷ்புக்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

இதன் காரணமாகக் கூட்டம் முடிந்த பின்னர் ஊடகவியலாளர்களுடன் சந்திப்பை மேற்கொள்வதற்கும் தேவையான விடயங்களை அவர்களுக்கு வழங்குவதற்கும்; தீர்மானித்தோம்' என்றார்.  

இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் குறுக்கிட்டு, கடந்த கூட்டங்களின்போது ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். எனவே, இக்கூட்டத்துக்கு மாத்திரம் ஏன் இந்த நடைமுறை என்று கேள்வியெழுப்பினார்.

அத்துடன், இக்கூட்டத்துக்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இதனை அடுத்து மாகாணசபை உறுப்பினர் தெரிவிக்கையில், 'இது இந்த மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுக் கூட்டம். இங்கு என்ன நடக்கிறது என்பதை மக்களுக்கு ஊடகங்கள் மூலமாகத் தெரியப்படுத்தும் பொறுப்பு ஊடகவியலாளர்களுக்கு உண்டு. ஆகவே, இக்கூட்டத்துக்கு  ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்' என்றார்.  

நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் மக்கள் அறிய வேண்டும் என்பதற்காக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் நிலையில், சாதாரண அபிவிருத்திக் குழுக் கூட்டம் தொடர்பில் மக்களுக்கு தெரிவிப்பதற்கு ஏன் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படக் கூடாது எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த த.தே.கூ.வின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், 'அனைவரும் பொறுப்புடனும் ஒழுக்கத்துடனும் நடக்க வேண்டும். ஊடகவியலாளர்களை இக்கூட்டத்துக்கு அனுமதிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை.

மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களான இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, மாவட்டச் செயலாளர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோர் இதனை ஏற்றுக்கொண்டதை அடுத்து, கூட்டத்தில் கலந்துகொள்ள ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .