2025 ஜூலை 09, புதன்கிழமை

'விகாரைக்கு ஜனாதிபதி வருகை தராமை கவலையாகவுள்ளது'

Suganthini Ratnam   / 2016 ஜூலை 14 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய பௌத்த  விகாரைக்கு வருகை தராமல் புறக்கணித்துள்ளமை கவலையாக உள்ளது என அவ்விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் தெரிவித்தார்.

குறித்த விகாரையில் புதன்கிழமை (13) மாலை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'இந்த நாட்டு ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டு ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவர் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு 03 தடவைகள் வருகை தந்துள்ளார். இருப்பினும், மட்டக்களப்பு மங்களராமய பௌத்த விகாரைக்கு வருகை தராமல் புறக்கணித்துச் சென்றுள்ளார். இது கவலையளிக்குரியது என்பதுடன், கிழக்கு மாகாணத்தில் உள்ள பௌத்தர்களையும் கவலையடையச் செய்துள்ளது' என்றார்.

'மேலும் மல்வத்தை, கண்டி, அஸ்கிரிய மற்றும் களணி ஆகிய பகுதிகளில் உள்ள விகாரைகளுக்கு அழைக்காமலே செல்லும் ஜனாதிபதி, ஏன் அழைத்தும் மட்டக்களப்பு மங்களராமய பௌத்த விகாரைக்கு வருகை தரவில்லை' எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

கடைசியாக கடந்த 10ஆம் திகதி ஜனாதிபதி மட்டக்களப்புக்கு வருகை தந்து பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார். அப்போது, மட்டக்களப்பு வெபர் மைதான திறப்பு விழாவில் வைத்து மட்டக்களப்பு மங்களராமய பௌத்த விகாரைக்கு ஒரு நிமிடமாவது வந்து செல்லுமாறு அழைப்பு விடுத்தேன். தனக்கு நேரம் இல்லை என்று கூறி எனது அழைப்பை புறக்கணித்து, அவர் விகாரைக்கு வருகை தராமல் விட்டார்.

இந்த விகாரையில் கடந்த 22 வருடங்களாக நான் கடமையாற்றுகின்றேன். யுத்த காலத்தில் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் எனது உயிரைப் பணயம் வைத்து கடமையாற்றியுள்ளேன்.  யுத்தத்தின்போது, எனது கையில் பல இராணுவ வீரர்களின் உயிர்கள் பிரிந்துள்ளன. இவ்வளவு கடினமான காலத்தில் கடமையாற்றி பல சவால்களுக்கு முகங்கொடுத்து ஐக்கியத்தை நிலைநாட்ட பாடுபட்டுள்ளேன்' என்றார்.

'எமது விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டட நினைவுக்கல்லில் ஜனாதிபதியின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. அவர் விகாரைக்கு வருகை தராமல் புறக்கணித்ததால், அவரின் பெயர் அதில் தேவையில்லை என்பதாலேயே அந்த நினைவுக்கல்லை உடைத்தேன். இனிமேல் ஜனாதிபதி மட்டக்களப்புக்கு வருகை தருவதாயின், எமது விகாரைக்கு வருகை தந்துவிட்டே ஏனைய இடங்களுக்குச் செல்ல வேண்டும். அவர் ஒரு பௌத்தர்; என்பதால் இந்த வேண்டுகோளை விடுக்கின்றேன்' என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .