2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

சுனாமியால் பாதிக்கப்பட்ட பாடசாலையினை புனரமைத்து தருமாறு கோரிக்கை

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 08 , பி.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோகித்)

சுனாமி அனர்த்தத்தின்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பாடசாலைகளிலும் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் புனரமைக்கப்பட்டுள்ளபோதிலும் இதுவரை பெரியகல்லாறு மத்திய கல்லூரியில் எந்தவித புனரமைப்பும்; மேற்கொள்ளப்படாமை கவலையளிப்பனவாகவுள்ளதாக மத்திய கல்லூரி அதிபர் கே.நல்லதம்பி தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை பெரியகல்லாறு மத்திய கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் தலைமையுரை ஆற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்...

பட்டிருப்பு கல்வி வலயத்தில் கல்வியின் கண்களாக விளங்குகின்ற பாடசாலைகளுள் பெரியகல்லாறு மத்திய கல்லூரியும் ஒன்றாகும். வரலாற்றில் நீண்ட காலப் பின்னணியைக்கொண்ட இந்த பாடசாலை இப்பிரதேசத்திலும் இதனை அண்டிய பிரதேசத்திலும் பல கல்விமான்களை உருவாக்கியுள்ளது.

இருந்தபோதிலும் 2004ஆம் ஆண்டில் சுனாமி அனர்த்தத்தின்போது மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட கல்லூரியாக இது காணப்படுகின்றது.
சுனாமி மீள்கட்டுமான வேலைகளில் பல கோடி ரூபாய் பணத்தினைக்கொண்டு பல பாடசாலைகள் புனரமைக்கப்பட்டுள்ளபோதிலும் சுனாமியினால் முற்றாக பாதிக்கப்பட்ட இப்பாடசாலையில் ஒரு சிறிய புனரமைப்பும் இதுவரையில் இடம்பெறாமை கவலையளிக்கின்றது.
சுனாமி அனர்த்தத்தின்போது பாடசாலைக் கட்டிடங்கள் மாத்திரமன்றி மாணவர் கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் அனைத்தும் அழிவடைந்தன. ஆனால் மாணவர்களுக்கான தளபாடங்களைத்தவிர வேறு எந்தவொரு தேவையும் பாடசாலைக்கு வழங்கப்படாமல் இருப்பது மிகவும் கவலையளிக்கின்றது.

இவையாவற்றினையும் பெற்றுக்கொள்ளுமுகமாக அரசாங்கம், அரசசார்பற்ற நிறுவனங்கள், நாடாளுமன்ற பிரதிநிதிகள், கல்வித்திணைக்களங்கள், அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினருடனும் தொடர்புகொண்டபோதிலும் எந்தவித நன்மையும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டு உரையாற்றினார்.

பட்டிருப்பு வலய கோட்டக்கல்விப்பணிப்பாளர் கே.குணநாயகம் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்த பரிசளிப்பு விழாவில் பாடசாலை அதிபர் கே.நல்லதம்பி தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்வில் பல்வேறு ஆக்கங்களையும் தாங்கிய 'வாசனை' என்னும் சிறப்பு மலர் வெளியிட்டுவைக்கப்பட்டதுடன் அந்த மலர் தொடர்பில் முதுபெரும் எழுத்தாளரும் கல்விமானும் ஓய்வுபெற்ற ஆசிரியருமான சரவணை செல்லையா மலராய்வினை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் பாடசாலையில் பல்வேறு வழிகளிலும் சாதனைபுரிந்த மாணவர்கள் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

பட்டிருப்பு வலயத்திலேயே பாரிய ஒன்றுகூடல் மண்டபத்துடன் இயங்கிய இந்த பாடசாலையில் சுனாமியின் பின்னர் இன்னும் தற்காலிக கொட்டகையிலேயே இந்த விழா நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--