2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

தாந்தாமலை முருகன் தமிழ் முருகனாகவே இருக்க வேண்டும்: அரியநேத்திரன் எம்.பி

Menaka Mookandi   / 2011 ஜூன் 14 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

தாந்தாமலை முருகன் தமிழ் முருகனாகவே இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய வேண்டுதலாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பின் படுவான்கரையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தாந்தாமலையில் உள்ள பிள்ளையார் ஆலய கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'கதிர்காமக் கந்தன் தமிழை மறந்து நிற்கிறார், இந்த நிலைக்கு தாந்தாமலை முருகன் வந்துவிடக்கூடாது, தாந்தாமலையானும் தமிழை மறந்துவிடுவாரா என்ற ஐயம் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கிறது. கடந்த காலத்தில் ஏற்பட்ட போர் அனர்த்தம் மற்றும் அனர்த்தங்களையும் மையமாக வைத்தே தாந்தாமலையானைப் போற்றி வருகிறோம்.

தாந்தாமலை பிள்ளையார் ஆலயத்தினையும் முருகப் பெருமானின் ஆலயத்துக்கு ஏற்ப அமைத்து கிழக்கிலங்கையில் மிகப்பெரும் ஆலயமாக மாற்ற வேண்டும் என்பது எங்களுடைய நோக்கமாகும். அது மட்டுமல்லாமல் வழிபாட்டுக்கு அப்பால் இந்த நிலத்தையும் மண்ணையும் காப்பாற்றவேண்டிய கடப்பாடு தமிழ் மக்களுக்கு இருக்கின்றது.

இப்போது கும்பாபிஷேகம் நடத்தப்பட்டிருந்தாலும், இன்னமும் பல தேவைகள் இருக்கின்றன. இங்கு வேல் ஒன்று நிறுவ வேண்டியுள்ளது. இங்குள்ள காணிகளை செப்பனிட வேண்டும். பெயர்ப்பலகை நிறுவப்பட வேண்டும். இவ்வாறு செய்யப்படும் போதுதான் ஆலயப் பகுதியைப் பாதுகாக்க முடியும்.

ஏனென்றால் கதிர்காமக்கந்தன் ஆலயம் தமிழை மறந்த ஒரு ஆலயமாக இருக்கின்ற போது இந்த தாந்தாமலையும் தமிழை மறந்ததாக மாறிவிடுமோ என்ற அச்சம், ஐயப்பாடு தமிழ் மத்தியில் இன்னமும் இருந்து கொண்டே இருக்கிறது.

போராட்டம் முடிவுற்றவுடன் பல பிரதேசங்களில் அகழ்வு வேலைகள் நடைபெற்றன. இந்த ஆலயப்பிரதேசத்திலும் அது மேற்கொள்ளப்பட்டது. திட்டங்கள் தீட்டப்பட்டன. இவை மாண்புமிகு ஜனாதிபதி மற்றும் கலாசார அமைச்சரான பிரதமருக்கும் அறிவித்து தடுக்க முயற்சிகள் மேற்கொண்டதன் பயனாக நிறுத்தப்பட்டது. அது முழுமையாக நிறுத்தப்பட்டதா, அல்லது எதிர்காலத்தில் நடைபெற வாய்ப்பிருக்கிறதா என்று நாம் கவனத்துடன் பார்த்திருக்க வேண்டும்.

ஆகவே இந்த ஆலயத்தை வெறுமனே பட்டிப்பளை பிரதேசத்திற்குரியது என்று பார்க்காமல் படுவான்கரையில் உள்ளது என்று பார்க்காமல், கிழக்கு மாகாணத்தில், வடகிழக்கில் இருக்கின்ற தமிழ் மக்கள் பாதுகாக்க வேண்டிய வளர்க்க வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் உள்ளது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X