2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

சிங்கள பேரினவாதிகளே ரகுவை கொலை செய்தனர்: முதலமைச்சர் சந்திரகாந்தன்

Super User   / 2011 நவம்பர் 14 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முன்னாள் தலைவர் ரகுவை சிங்கள பேரினவாதிகளே கொலை செய்தனர் என கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

இவரை ஒரு போதும் தமிழீழ விடுதலை புலிகள் கொலை செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முன்னாள் தலைவர் ரகுவின் மூன்றாவது ஆண்டு நினைவு தின கூட்டம் இன்று திங்கட்கிழமை ஆரையம்பதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில்  உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் ரகு என அழைக்கப்படும் குமாரசாமி நந்தகோபன் கொழும்பில் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.
விடுதலை புலிகள் அழிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் ரகுவை அவர்கள் கொலை செய்ய சந்தர்ப்பம் இல்லை. மாறாக சிங்கள பேரினவாதமே ரகுவை கொலை செய்தது.

கிழக்கு மாகாண சபை அமைக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியை சர்வதேசத்திற்கு கொண்டு சென்றவர் ரகுவே. நாங்கள் முதலமைச்சராக வேண்டும் என்றோ அல்லது மாகாண சபை உறுப்பினர்களாக வேண்டும் என்றோ அரசியலுக்கு வரவில்லை.

யாழ். மேட்டு குடியினருக்கு பின்னால் சென்று எமது கிழக்கு மாகாணத்தை சீரழிக்க விரும்பவில்லை. நாங்கள் அடித்து விரப்பட்டாலும் அல்லது சுடப்பட்டாலும் ரகுவின் கொள்கையை ஒரு போதும் விடமாட்டோம். இன்று கிழக்கு மாகாணத்தில் பின் தங்கிய கிராமங்களின் கல்வியை மேம்பாடடைய செய்துள்ளோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கூறுவது சரியானதும் சாத்தியமானதும் என்றிருந்தால் நாங்கள் அவர்களுக்கு பின்னால் சென்றிருப்போம். அவர்கள் கூறுவது சாத்தியமற்றது.

சாதிக்க முடியாதவற்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கூறுகின்றனர். அதனால் தான் நாங்கள் கிழக்கு மாகாணத்தை கையிலெடுத்தோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பேசும் உணர்ச்சி பேச்சு தான் குழப்பத்தை ஏற்படுத்துகின்றது.

காசி ஆனந்தன் இந்தியாவிலிருந்து கொண்டு வீர வேசமாக பேசியுள்ளார். காசி ஆனந்தனும் அவரது குடும்பத்தினரும் இந்தியாவிலேயே வசிக்கின்றனர். அவரது பிள்ளைகள் இந்தியாவிலேயே கல்வி கற்கின்றனர். இவரின் வீர பேச்சு குழப்பதையே ஏற்படுத்தும். மாறாக எந்த தீர்வையும் கொண்டு வராது. மேட்டு குடியினர் நமது தலைகளில் மிளகாய் அரைக்க இடம்கொடுக்க கூடாது.

மீண்டும் தமிழ் மக்களை அழிப்பதற்கு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி  இடமளிக்காது. சிங்கள பேரினவாதிகளுடன் போராடியாவது எமது மக்களுக்கு நாம் சரியாக வழி காட்டுவோம். கிழக்கு மாகாணம் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் வாழுகின்ற ஒரு மாகாணமாகும். இதை இன நல்லுறவுடன் கட்டியெழுப்ப வேண்டும்.

ரகுவின் கொலை நன்கு திட்மிட்டு இடம்பெற்றதாகும். கிழக்கில்  தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் கொள்கையை நிலைநாட்டி வெற்றி கொள்ள செய்த ரகு நோர்வேயில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையில் பின்னணியிலிருந்து செயற்பட்டவர்.

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியை கிழக்கு மாகாணத்துக்கு என அவர்உருவாக்கி அரசியல் கட்சியாக பதிவு செய்தார். எனவே, அவரின் கொள்கையை வெற்றியடைய செய்வதே அவருக்கு நாம் செலுத்துகின்ற அஞ்சலியாகும் என்றார்.


  Comments - 0

  • Rajiswaran Tuesday, 15 November 2011 04:36 AM

    பொலிஸ் புகார்கொடுத்து வழக்குபோடலாமே

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X