2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

உலகம் அழிவதாக மதப் பயங்கரவாதம் தலையெடுக்கின்றதா: விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பு கேள்வி

Kogilavani   / 2012 டிசெம்பர் 13 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)
தமிழர் பிரதேசங்களில், அச்சமும் பீதியும் ஓரளவுக்கு குறைந்து மக்கள் நிம்மதியை நாடிக்கொண்டிருக்கும் வேளையில்; மக்களின் இயலாமைகளைப் பயன்படுத்தி உலக அழிவு போன்ற தகவல்களை திட்டமிட்ட வகையில பரப்பி பீதியடையச் செய்து மூளைச் சலவை செய்வது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பின் கிழக்குப் பிராந்திய அமைப்பாளர் வருண் க.தாஸ் தெரிவித்தார்.

'உலகம் அழிகிறது எனக் கூறி பிற்போக்கவாதத்துடன் மதப் பயங்கரவாதம் தலையெடுக்கின்றதா என்றும் அவர்  கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பில்  விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பின் கிழக்கு பிராந்திய அமைப்பாளர் வருண் க.தாஸ் மேலும் தெரிவிக்கையில்,

"பயங்கரவாதம் அழிக்கப்பட்டாலும் இவ்வாறான பிற்போக்கு வாதக் கருத்துக்கள் மூலம் மக்களைப் பிழையாக வழிநடத்தும் போது அதைத் தட்டிக்கேட்கும் படித்த இளைஞர்களை பொலிஸார் வேதனைப் படுத்துவதும் கண்டிக்கத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை (கொக்கட்டிச்சோலை) பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரியாவெளி கிராமத்தில் ஒரு மதம் பரப்பும் போதகர் கிராம மக்கள் மத்தியில் உலகம் அழியப்போவதாகக்கூறி நேற்று புதன்கிழமை மதியம் கலவரத்தை உண்டு பண்ணியபோது அதை அப்பாவி இளைஞர்கள் கண்டித்தனர்.

இந்த இளைஞர்கள் மீது அந்த மதப்போதகர்  செய்த முறைப்பாட்டினால் பொலிஸாரினால் நான்கு இளைஞர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீண்டுள்ள இளைஞர்கள், மக்கள்  இப்பொழுது மத பயங்கரவாதிகளினால் அச்சுறுத்தப்படுவதும் துன்புறுத்தப்படுவதும், தமிழ் இந்து மக்களின் நிலை கிராமப் பகுதிகளில் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என்பதனைப் புலப்படுத்துகிறது.

இதேவேளையில், ஆபிரிக்க மக்கள் பட்டிணிச்சாவிலும் குடி நீரில்லாத கொடுமையிலும், தமக்கிடையேயான இனவாத யுத்தங்களிலும் அழிந்து கொண்டிருக்கின்ற நிலையில் இந்த மத போதகர்கள் அங்கு போய் ஏன் தமது பணிகளைச் செய்யக் கூடாது என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும்.

அத்துடன், இது விடயமாக பௌத்த மகா சபை, இந்துக் குருமார் ஒன்றியங்கள், இந்து ஆலயங்கள் மற்றும்; நிறுவனங்களின் ஒன்றியம் போன்ற அமைப்புகள் மௌனம் காப்பது இந்து மக்களை மேலும் குழப்ப நிலைக்கு இட்டுச் செல்லும் என்பதே உண்மை.

இவ்வாறு கருத்துக்களைப் பரப்புபவர்கள் எதிர்வரும் 21ஆம் திகதி உலகம் அழியாவிட்டால், இந்தப் பொய்ப் பிரச்சாரகர்கள் மீண்டும் தமது சொந்த சமயங்களுக்கு திரும்பி வந்து மனம் திரும்பி வழவேண்டும்என்றும் கேட்டுக் கொள்கிறேன் எனவும் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X